×

செய்துங்கநல்லூரை தூய்மை நகரமாக மாற்றும் பணி துவக்கம்

செய்துங்கநல்லூர், ஜூன் 7: செய்துங்கநல்லூரை தூய்மை நகரமாக மாற்ற முடிவுசெய்துள்ள பஞ்சாயத்து நிர்வாகம் அதற்கான பணிகளை துவங்கியுள்ளது. கருங்குளம் ஒன்றியத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக செய்துங்கநல்லூர் திகழ்கிறது. இங்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. புதன்கிழமை தோறும் வாரச்சந்தையால் பல்லாயிரம் பேர் பயன்பெறுகின்றனர். சுற்று வட்டார குக்கிராமங்களில் இருந்து இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு பணிநிமித்தம் வந்துசென்றபோதும் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் குப்பை குவியலும், கழிவுநீர் தேங்கி நிற்பதும் தொடர்கிறது. பொதுமக்கள் பயன்படுத்துக்கான பொது கழிவறையும் இல்லை. இதனால் அவதிப்பட்டு வந்த மக்கள், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து செய்துங்கநல்லூரில் பொது கழிவறை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதும் பொது கழிவறை அமைக்க இன்னும் சுமூகத் தீர்வு கிடைக்கவில்லை.

இதனிடையே செய்துங்கநல்லூரை தூய்மை நகரமாக மாற்ற முடிவுசெய்துள்ள பஞ்சாயத்து நிர்வாகம் அதற்கான நடவடிக்கையில் தற்போது களமிறங்கியுள்ளது. இதையடுத்து செய்துங்கநல்லூர் தனி அலுவலரும் கருங்குளம் ஒன்றிய ஆணையாளருமான  பாலசுப்பிரமணியன், இதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் படி செய்துங்கநல்லூர் பொது இடத்தில் குப்பை கொட்ட தடை விதிக்கப்பட்டது. இதை அறிவுறுத்தி  10 இடங்களில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகையில் பொது இடத்தில் பிளாஸ்டிக்போன்ற பொருள்களை, குப்பையை கொட்டினால்  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்,  குடிதண்ணீரை  அனுமதி இன்றி எடுக்க கூடாது, மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவுப்பு பலகையை ஊராட்சி செயலாளர் சங்கரபாண்டியன் தலைமையில் ஊழியர்கள் 10 இடங்களில் வைத்தனர். மெயின்ரோட்டில் 7 இடங்களிலும், பஞ்சாயத்து அலுவலகம், ஆர்.சி.பள்ளி அருகில், வசவப்பபுரம் சாலையில் இந்த விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் செய்துங்கநல்லூர் உள்ள சாக்கடைகளை அகற்றவும் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.  இது  மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோலவே பொது கழிவறை அமைக்க தனி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Tags : city ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு