×

தூத்துக்குடி-நாசரேத்-உவரி மார்க்கத்தில் 15 நாட்களாக நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கம்

நாசரேத், ஜூன் 7: தூத்துக்குடியில் இருந்து நாசரேத் வழியாக உவரிக்கு சென்ற அரசு பஸ் நிறுத்தப்பட்டது குறித்து தினகரனில் செய்தி வெளியானதை அடுத்து அந்த பஸ் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடியில் இருந்து தினமும் காலை 5.15 மணிக்கு தடம் எண் 145என். அரசு பஸ் புறப்பட்டு புதுக்கோட்டை, செபத்தையாபுரம், சாயர்புரம், ஏரல், நாசரேத், சாத்தான்குளம், இட்டமொழி, திசையன்விளை வழியாக உவரிக்கு சென்று வந்தது.  அதே போல் உவரியில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு திசையன்விளை, நாசரேத், குரும்பூர் வழியாக தூத்துக்குடிக்கு சென்றது. அதே போல் மதியம் 1.15 மணிக்கு இந்த பஸ் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு இதே மார்கமாக உவரிக்கு சென்றது. பின்னர் உவரியிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திசையன்விளை, இட்டமொழி, சாத்தான்குளம், நாசரேத், குரும்பூர், ஏரல் வழியாக தூத்துக்குடிக்கு சென்றது. இந்த பஸ் நாசரேத் பஸ் நிலையத்தில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு உவரிக்கு சென்றது. அதே போல் திசையன்விளையில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு நாசரேத் வழியாக தூத்துக்குடிக்கு சென்று வந்தது. ஆனால், இந்த அரசு பஸ் கடந்த 15 நாட்களுக்கு முன் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என பலரும் அவதிப்பட்டனர். இதுகுறித்த செய்தி தினகரனில்  கடந்த 3ம் தேதி வெளியானதோடு இந்த பஸ்சை மீண்டும் இயக்க கோரி கடந்த 3ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக நேற்று (6ம் தேதி) முதல் இந்த பஸ் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள அனைத்துத் தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பஸ் மீண்டும் இயக்கப்பட்டு வந்தபோதும் பஸ்சில் அமரும் இருக்கைகள் பழுதடைந்தே காணப்படுகின்றன. அத்துடன் பழைய பஸ்சையே இயக்குகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பழைய பஸ்சை மாற்றி இதே தடத்தில் புதிய பஸ்சை  இயக்க முன்வரவேண்டும் என்றனர்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...