×

ராதாபுரம், திசையன்விளை தாலுகாவில் 45 கிராமங்களில் திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் சேவை மையங்கள்

ராதாபுரம், ஜூன் 7: தமிழகம் முழுவதும் விஷன் 2023 என்ற திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஅறிவித்தார். அடுத்த 10ஆண்டுகளில் கிராமங்களில் வறுமை ஒழிப்பு, கிராம மேம்பாடு, தனிநபர் வருமான உயர்வு ஆகியவை கிராமபுறங்களில் மேம்படுத்த இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த கிராமம் தோறும் அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களின் பட்டா, சிட்டா, அடங்கல்கள், கோரிக்கை மனுக்கள் ஆகியவை கணினிமயம் ஆக்கப்படும் என்றும் கிராமமக்கள் தங்கள் தேவைகளுக்கு மாவட்டத் தலைநகருக்கோ, தாலுகா தலைநகருக்கோ அலையவேண்டியதில்லை என்றும்  அனைத்து வகை அரசு திட்டங்களும் மக்களுக்கு எளிதாக கிடைக்க கிராமங்கள் தோறும் கிராம சேவை மையங்கள் அமைக்கப்படும் என்றும் அதற்கு தனியாக அலுவலர்கள் நியமிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கிராமங்கள் தோறும் இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 1 சேவை மையம் சுமார் ரூ.14 லட்சத்தில் கட்டிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டன. ராதாபுரம் திசையன்விளை தாலுகாவில் உள்ள 45 கிராம பஞ்சாயத்துகளிலும் இக்கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னமும் பயன்பாட்டுக்கு  வரவில்லை. தொலைபேசி கட்டணம், மின்கட்டணம், அரசு துறைகளுக்கான அனைத்து சேவைகள் மற்றும் கல்வி சேவைகள் என கிராம பஞ்சாயத்துகளை மினி டிஜிட்டல் கிராமமாக மாற்ற அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்டு கட்டப்பட்டஇக்கட்டிடங்கள் கிராம பஞ்சாயத்துகளில் கேட்பாரற்று கிடக்கின்றன. இன்னமும் கொஞ்ச நாள் போனால் இக்கட்டிடங்கள் பராமரிப்பின்றி இருக்கும் நிலைக்கு தள்ளப்படலாம். தற்போது தங்களது தேவைகளுக்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள ஒரே ஒரு சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆதார்கார்டு, ரேஷன் கார்டு போன்றவற்றில் மக்கள் தேவைகளை நிறைவேற்ற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அரசு விரைந்து செயல்பட்டு கிராமங்களில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் காத்திருக்கும் கிராமசேவை மையங்களில் உடனடியாக போதிய ஆட்களை நியமித்து அவைகளை இயக்கிட வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கூடங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாண்டல் முத்துராஜ் அரசுக்கு மனு அனுப்பியுள்ளார். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நீதிமன்றம் செயல்படுமா?

ராதாபுரம் தாலுகாவிற்கு புதிய நீதிமன்றங்களை அமைக்க கடந்த ஆண்டே அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் போதிய கட்டிடங்கள் இல்லாததால் இன்னமும் ராதாபுரத்தில் நீதிமன்றங்கள் செயல்படவில்லை. கடந்த மாதம் ராதாபுரம் சமுதாய நலக்கூடத்தை தற்காலிகமாக ஒதுக்கி நீதிமன்றம் செயல்பட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். எனினும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை ராதாபுரம் யூனியன் வளாகத்தில் கட்டபட்டு மூடிகிடக்கும் கிராமசேவை கட்டிடத்தை ராதாபுரத்தில் புதியதாக துவக்கப்பட உள்ள நீதின்றபணிகளுக்கான கட்டிடமாக ஒதுக்கி தர வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Service Centers ,opening ceremony ,villages ,taluka ,Diesanvila ,Radhapuram ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா