நிபா வைரஸ் பாதிப்பு தமிழக எல்லை பகுதியில் கலெக்டர் ஆய்வு

கூடலூர், ஜூன் 7: நீலகிரி மாவட்டம் கூடலூர் எல்லைப் பகுதிகளில் கேரளாவை ஒட்டியுள்ள நாடுகாணி, சேரம்பாடி, தாளூர், பாட்டவயல், நம்பியார் குன்னு உள்ளிட்ட எல்லைகள் வழியாக கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் பயனிகளிடம் நேற்று முன்தினம் மாலை துவங்கி தமிழக மருத்துவ குழுவினர் முகாம்கள் அமைத்து சோதனை நடத்தி நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏறபடுத்தி வருகின்றனர். கேரளாவில்  மீண்டும் பலருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நிபா வைரஸ் குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு அதிக போக்குவரத்து உள்ள எல்லைப் பகுதியான கூடலூரை அடுத்துள்ள பல்வேறு பகுதிகள் வழியாக கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நிபா வைரஸ் குறித்த ஆய்வுகள் தமிழக மருத்துவத் துறையினரால் செய்யப்பட்டு வருகின்றது. இந்த முகாம்களை நேற்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கூடலூர் ஆர்டிஓ ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த எல்லை பகுதி முகாம்களில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாலையோரங்களில் பாதுகாப்பற்ற முறையில்  சுற்றுலா பயணிகளிடம் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பழங்களை  பறிமுதல் செய்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அருகில் உள்ள சுகாதார மையங்கள் அரசு மருத்துவமனைகளில் நிபா வைரஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறவும் தேவைப்பட்டால் சிகிச்சை எடுத்து கொள்ளவும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags : Nifa ,collector ,border area ,Tamil Nadu ,
× RELATED காரைக்குடியில் குழந்தைகளை தாக்கும் வைரஸ் காய்ச்சல்