×

அரசு மருத்துவமனையில் நிபா காய்ச்சலுக்கு தனி வார்டு அமைப்பு

பொள்ளாச்சி, ஜூன் 7: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், நிபா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க  10 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். பொள்ளாச்சி உடுமலைரோட்டில் உள்ள, அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் என தினமும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் ஒருபகுதி கட்டிடத்தில் நேற்று முன்தினம் முதல், நிபா வைரஸ் நோய் சிறப்பு சிகிச்சைக்கான தனி வார்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த சிறப்பு வார்டில், 10 படுக்கை மற்றும் அதன் முழுவதும் கொசுவலை போட்டு மூடப்பட்டுள்ளது. இதை நேற்று, அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் ராஜா மற்றும் டாக்டர்கள் பலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் ராஜா கூறுகையில், ‘கடந்த ஆண்டில் இதேபோன்று கேரளாவில் நிபா வைரஸ் பரவியது.  அதுபோல் இந்த ஆண்டில் தற்போது, கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நிபா வைரஸ் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், கேரளாவவையொட்டியுள்ள பொள்ளாச்சி பகுதியில் இந்நோய் பரவாமல், அதற்கான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில், நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டில் டாக்டர் மற்றும் செவிலியர்களை தவிர, வெளியாட்கள் யாரும் அனுமதி கிடையாது. தற்போதைய சூழ்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் நிபா வைரஸ் நோய் தாக்குதல் என்பது கிடையாது.   இருப்பினும், கேரளாவில் பரவிய அந்நோய், பொள்ளாச்சி பகுதியில் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் என்பது, பழந்திண்ணி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. இந்தநோய் வந்தால், காய்ச்சல் மற்றும் தொண்டை புண், தலை வலி ஆரம்பக்கட்டத்தில் உண்டாகும்.  கடுமையாக நோய் அறிகுறி இருந்தால், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்’ என்றார்.

Tags : government hospital ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...