×

விபத்துகளை தடுக்க கெடிமேடு பிஏபி கால்வாய் பாலம் அகலப்படுத்தும் பணி துவக்கம்

பொள்ளாச்சி, ஜூன் 7: பொள்ளாச்சி உடுமலைரோடு கெடிமேட்டில் விபத்துகளை தடுக்க, பிஏபி கால்வாய் பாலம் அகலப்படுத்தும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.  பொள்ளாச்சியிலிருந்து பிரிந்து செல்லும் நெடுஞ்சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து உள்ளன. குறிப்பாக உடுமலை, பழனி,  திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான ரோடான, பொள்ளாச்சி உடுமலைரோடு கெடிமேடு குறுக்கே பிஏபி கால்வாய் பாலம் உள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலமானது குறுகலாக இருப்பதுடன், அந்த இடம் மேடு பள்ளமாக இருப்பதால் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்கால் பாலத்தில் மோதி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இரவு நேரத்தில் வரும் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரையிலான ஓட்டுனர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த ஆண்டில், காரில் வந்த கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் 4 பேரும், கடந்த மார்ச் மாதம் கோவையிலிருந்து பழனி வந்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரும் கெடிமேடு கால்வாயில் காருடன் விழுந்து பலியானது குறிப்பிடத்தக்கது. மேலும், இருசக்கர வாகனத்தில் வந்த சிலர், பாலம் தடுப்பு சுவற்றில் மோதி கடந்த ஒரு ஆண்டில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து நடைபெற்ற விபத்தால் பொதுமக்கள் வேதனையடைந்தனர்.
 பொள்ளாச்சியிலிருந்து உடுமலைக்கு செல்லும் வழியில் உள்ள கெடிமேடு பிஏபி கால்வாய் பாலத்தில் வாகனங்கள் மோதி உயிரிழப்பை தவிர்க்க, பாலத்தை  அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். இதற்கிடையே, அந்த பாலத்தை அகலப்படுத்தும் பணி, நெடுஞ்சாலைத்துறை மூலம்  நேற்று முன்தினம் துவங்கப்பட்டது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘உடுமலைரோட்டில் மிகவும் குறுகலான பாலத்தில், கெடிமேடு பிஏபி கால்வாயை கடந்து  செல்லும் பாலமும் உள்ளது. இந்த பாலத்தை அகலப்படுத்த அவ்வப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அப்பணி துவங்கப்பட்டுள்ளது. பிஏபி கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தத்தால், கெடிமேடு பிஏபி கால்வாயை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இந்த பாலம் மொத்தம் ஏழரை மீட்டர் தூரம் கொண்டதாகும். இருபுறமும் தலா இரண்டரை மீட்டர் துரத்துக்கு அகலப்படுத்த இடம் கையகப்படுத்தப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் பாலத்தின் அருகே தொட்டவாறு புதிய பாலம் கட்டப்படுகிறது. இதன் மூலம் விபத்துகள் கட்டுப்படுத்தப்படும். இப்பணி ஒரு ஆண்டிற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : canal bridge ,accidents ,
× RELATED க.பரமத்தி மயான சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள்