×

கன்னியாகுமரியில் கைதான கொள்ளையன் முகவரி கேட்பது போல் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது அம்பலம்

கன்னியாகுமரி, ஜூன் 7: கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் தனியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டு, முகவரி கேட்பது போல் நடித்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி பகுதியில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதனை தடுக்க மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை அந்த கொள்ளையரை தொடர்ந்து தேடிவந்தனர். இந்த நிலையில் மகாதானபுரத்தில் நடந்த வாகன சோதனையில் ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கன்னியாகுமரி பகுதியில் பெண்களிடம் செயின் பறித்தது அந்த வாலிபர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணையில் தக்கலை அருகே உள்ள குமாரபுரத்தை சேர்ந்த நியூகாலனி பகுதியை சேர்ந்த கனகவேல் மகன் சிபு (29) என்பது தெரியவந்தது.
சுசீந்திரம், அஞ்சுகிராமம், மணவாளக்குறிச்சி, இரணியல், நெல்லை மாவட்டம் கூடங்குளம், பழவூர், கன்னியாகுமரி போலீஸ் நிலையங்களில் 17 செயின் பறிப்பு வழக்கு தொடர்பாக சிபுவிடம் இருந்து 57 பவுன் எடைக்கொண்ட 16 செயின்களை மீட்டனர். விசாரணையில் சிபு கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிபு கன்னியாகுமரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். கூலிவேலைக்கு சென்று வந்துள்ளார். பின்னர் பைக்கில் வரும் சிபு, தனியாக நடந்து செல்லும் பெண்களை நோட்டமிட்டு, அவர்களிடம் சென்று விலாசம் கேட்பதுபோல் கேட்டு கழுத்தில் கிடக்கும் செயினை பறித்துச்செல்வாராம்.
இதில் செயினை பிடித்து போராடும் பெண்களை காலால் மிதித்து கீழே தள்ளிவிட்டு சிபு தப்பி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பெண்களிடம் பறிக்கும் செயினை தனியார் வங்கி களில் அடகு வைத்தும், விற்றும் ஆடம்பர செலவு செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Tags : Kanyakumari ,girls ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...