×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.100 கோடியில் வளர்ச்சி பணிகள் தீவிரம்

ஈரோடு, ஜூன் 7: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.100 கோடி  மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.  இப் பணிகளை அரசின்  முதன்மை செயலர் ஹர்மந்தர்சிங் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள ஈரோடு மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தின்கீழ் ரூ.990 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, முதல்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இந்த நிதியை கொண்டு ஈரோடு அருகே வைராபாளையம்,  வெண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள குப்பை கிடங்குகளில் குப்பைகள் அகற்றப்பட உள்ளது. வைராபாளையம் குப்பை கிடங்கில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் மைக்ரோ கம்போஸ்ட் சென்டர் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு முதன்மை செயலர் ஹர்மந்தர்சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்றுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.மேலும், மாநகராட்சி பகுதிகளில் தற்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கப்படுகிறது. அதன்படி, இதுவரை 25 வார்டுகளில் குப்பைகள் பிரித்து வாங்கப்படுகிறது.

மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஜூலை மாத இறுதிக்குள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.13.58 கோடி மதிப்பில் நடந்து வரும் 19 மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் கட்டுமான பணிகள் குறித்தும், புதிதாக ரூ.24.93 கோடியில்  கட்டப்பட்டு வரும் 23 பூங்கா பணிகள் குறித்தும், 27 பள்ளிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் குறித்தும் கேட்டறிந்தார். ஈரோடு மாநகராட்சி பகுதியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடந்து வரும் அனைத்து பணிகளையும் ஜூலை மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, தனியார் பங்களிப்பாக வைராபாளையத்தில் நவீன தொழில்நுட்பத்தில் குப்பைகளை எரித்து அந்த சாம்பல் மூலம் பேவர் பிளாக் தயாரிக்கும் திட்டத்தையும் முதன்மை செயலர் ஹர்மந்தர்சி–்ங் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநகராட்சி பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர்கள் அசோக்குமார், சண்முகவடிவு, விஜயா மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பொறியாளர்கள் பலரும் உடனிருந்தனர்.

Tags : Smart City Scheme ,
× RELATED ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்...