ஆதிதிராவிடர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை

ஈரோடு, ஜூன் 7:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கதிரவன் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 25 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளும், 31 பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் பள்ளி, கல்லூரிக்கு அருகில் உள்ள மேற்கண்ட விடுதிகளில் தங்கி படிக்க விருப்பமுள்ளவர்கள் விடுதியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதி காப்பாளரிடம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட வேண்டும்.

விடுதியில் சேர்க்கப்படும் மாணவ, மாணவியர் பெற்றோரின் ஆண்டு வருமானம்   ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருப்பதை கட்டாயம் உறுதி செய்து கொள்ள வேண்டும். விண்ணப்ப படிவத்தில் மாணவ, மாணவியரின் புகைப்படம்  ஒட்டப்பட்டு அதில் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும். விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர் கட்டாயம் வங்கி கணக்கு துவங்கி இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் ஆதார் கார்டு எண் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும். பள்ளி விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் இம்மாதம் 14ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் அடுத்த மாதம் 1ம் தேதிக்குள்ளும் விண்ணப்பம் அளிக்க வேண்டும். இவ்வாறு கதிரவன் கூறி உள்ளார்.

Tags : Adi Dravidar Hostels ,
× RELATED அமைப்புசாரா நலவாரியங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்