×

குமரியில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

நாகர்கோவில், ஜூன் 7: குமரி மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க களியக்காவிளை சோதனைசாவடி அருகே சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. கல்லூரி மாணவர் உள்பட இருவர் நிபா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 34 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கேரளாவையொட்டிய எல்லைப்புற மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இருந்து கட்டுமானம், மீன்பிடி தொழில் உட்பட பல தொழில்களுக்காக ஏராளமானோர் கேரளாவில் தங்கி உள்ளனர். இவர்கள் சொந்த ஊர்களுக்கு பஸ், ரயில் மூலம் வருகின்றனர். இவ்வாறு வருவோர் மூலம் நிபா வைரஸ் குமரி மாவட்டத்திலும் பரவ வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. எனவே குமரி மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதற்காக குமரி-கேரள எல்லையான களியக்காவிளையில் உள்ள சோதனைச்சாவடி அருகே சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மருத்துவ குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து காய்ச்சல் அறிகுறிகளுடன் வருகிறவர்களை பரிசோதிக்கும் வகையில் அங்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசு பஸ்கள், வாகனங்களில் உள்ள பயணிகளுக்கு நிபா வைரஸ் தொடர்பான துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நிகழ்சிக்கு இடைக்கோடு வட்டார மருத்துவ அலுவலர் சுபஜா தலைமை வகித்தார். மாவட்ட பூச்சியியல் வல்லுனர் விஜயகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ், இளநிலை பூச்சியியல் வல்லுனர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் குமார், ஜாண் பெனடிக்ட் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பங்கேற்றனர்.
மேலும் குமரி - கேரள எல்லையையொட்டியுள்ள கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் தாலுகா பகுதிகளுக்கு கேரளாவில் இருந்து வருகிறவர்களின் நடவடிக்கைகளையும், காய்ச்சல் மற்றும் நோய் பாதிப்புகளையும் கண்டறிய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தில் நடைபெறுகின்ற வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதுடன் நிபா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
 இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, மாவட்ட வன அலுவலர் ஆனந்த், சப் கலெக்டர் சரண்யா அறி, எழிலன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா சுகாதாரபணிகள் துணை இயக்குநர் டாக்டர் மதுசூதனன், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர், சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, ரயில்வே, போக்குவரத்து, நகராட்சி ஆணையர் மற்றும் உள்ளாட்சி துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

‘நிபா’ குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே நேற்று மாலையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரளாவில் நிபா காய்ச்சல் இருப்பதால் குமரி மாவட்டத்தில் இது குறித்து தேவையில்லாத வதந்திகள் உள்ளன. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். மாவட்டத்தில் 150 தனியார் மருத்துமனை, 12 அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகளை கண்காணித்து வருகிறோம். இதுவரை நிபா சம்பந்தமான அறிகுறிகளுடன் யாரும் இல்லை. வைரஸ் காய்ச்சல் எண்ணிக்கையும் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. குறிப்பிட்ட பகுதியில் அதிக காய்ச்சல் உள்ளதாகவும் தகவல் இல்லை. தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டம் உட்பட கேரள எல்லையில் உள்ள 8 மாவட்டங்களில் முழுமையான கண்காணிப்பு, காய்ச்சல் ஏற்பட்டால் சமாளிக்க தயார்நிலையில் உள்ளது. இது தொடர்பாக அச்சம் கொள்ள வேண்டாம். அணில், வவ்வால் போன்றவை கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம். பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும். தோல் நீக்கி சாப்பிடுவது நல்லது. நிபா தொடர்பாக ரத்த பரிசோதனை செய்துகொள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் வசதி உள்ளது. மாவட்டம் முழுவதும் தெருநாய் கடிகள் தொடர்பான தகவல்கள் உள்ளன. இதனை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பாலமோர் ரோடு குடிநீர் வடிகால்வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 15 நாளில் ஐந்து கி.மீ தூரம் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இதர சாலைகளும் சரி செய்யப்படும். இனிமேல் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் சாலை தோண்டக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டவுன் பகுதியில் மணிமேடை, கான்வென்ட், வேப்பமூடு பகுதியில் ஆய்வு செய்து வாகனங்கள் நிறுத்த, பேரிகார்டுகள் அகற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : collector ,action authorities ,Kumari ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...