×

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மா.கம்யூ. வலியுறுத்தல்

விருத்தாசலம், ஜூன் 7: விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டம் நடந்தது. மாநில குழு உறுப்பினர் மாதவன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் அசோகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் மூசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு பின்னர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய குழு உறுப்பினர் வாசுகி நிருபர்களிடம் கூறியதாவது:
கடலூர் மாவட்ட பாசன பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம், பெட்ரோலிய மண்டலமாக மாற்றுவதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். காவிரி பாசன பகுதி பாதுகாக்கப்பட்டு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக வேதாந்தா, ஓஎன்ஜிசிக்கு உரிமம் கொடுப்பதற்கான அபாயம் குறித்து குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனம் மூலமாக நேரடியாக மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இந்த பிரச்னையை தீர்ப்பதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது. தற்போதாவது போர்க்கால அடிப்படையில் குடிநீர் தேவையை சரி செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்தில் 100 நாள் வேலைதிட்டத்தை முறையாக கொடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.300 கோடி அளவிற்கு கடன் வாங்கிய அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலை முதலாளி ராம்தியாகராஜன் சொத்துக்களை ஜப்தி செய்து நிலுவைத்தொகையை வங்கிகளுக்கு செலுத்த வேண்டும்.என்எல்சி மூன்றாவது சுரங்கத்திற்கு விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் கட்டாயப்படுத்தி நிலங்களை எடுக்கக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது