×

ஆத்தூர் அருகே அனுமதியின்றி நத்தம் ஏரிக்கு வாய்க்கால் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

ஆத்தூர், ஜூன் 7: ஆத்தூர் அருகே, அனுமதியின்றி நத்தம் ஏரிக்கு வாய்க்கால் அமைக்கும் பணிக்கு, ஆயர்பாடி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆத்தூர் அருகே உள்ள ஆயர்பாடி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய விளைநிலங்களுக்கு முட்டல் ஏரியில் இருந்து பாசன வாய்க்கால் வசிஷ்ட நதி வரை உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரை கொண்டு, பாசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், முட்டல் ஏரியில் இருந்து அனுமதியின்றி கல்லாநத்தம் ஏரிக்கு தண்ணீரை கொண்டு செல்லும் வகையில், சிலர் தன்னிச்சையாக வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முட்டல் ஏரியிலிருந்து அனுமதியின்றி தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டால், ஆயர்பாடி உள்ளிட்ட வாய்க்கால் பாசன விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.

மேலும், கடந்த சில ஆண்டாக போதிய மழை இல்லாததால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், பாசன வாய்க்காலில் வரும் தண்ணீரையும் தடுத்து விட்டால், இங்குள்ள விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கி வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, அனுமதியின்றி வெட்டப்படும் வாய்க்கால் பணியை தடுத்து நிறுத்த, ஆயர்பாடி பகுதி விவசாயிகள் ஆத்தூர் ஆர்டிஓ, நீர்ப்பாசன அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Natham Lake Drain ,Atattur ,
× RELATED விவசாயிகள் ஏமாற்றம் பிரம்மரிஷி...