×

கவர்னரை எதிர்த்து மீண்டும் போராட்டம்

புதுச்சேரி, ஜூன் 7: மக்கள் தீர்ப்பு கொடுத்த பிறகும் கிரண்பேடி திருந்தவில்லை, அவருக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று நாராயணசாமி கூறினார்.
வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு நாளை முன்னிட்டு புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் எம்எல்ஏ நீல.கங்காதரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
புதுச்சேரியின் தனித்தன்மையை காப்பாற்ற போராடியவர், தன்னலமற்ற சேவை செய்தவர் வெங்கடசுப்பா ரெட்டியார். தியாகிகள் வ.சுப்பையா, அன்சாரி துரைசாமி ஆகியோருடன் இணைந்து பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடினார். ஆனால் தற்போது அரசியலுக்கு வருபவர்கள் தன்னை முதலில் வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் வெங்கடசுப்பா ரெட்டியார் போன்ற தலைவர்கள் தங்கள் சொத்துக்களை மக்களுக்காக இழந்தவர்கள்.
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் தொடர்ந்து பாடுபட்டவர். அவரது காலத்தில்தான் இந்த காங்கிரஸ் கட்சி அலுவலகம் வாங்கப்பட்டது.
அதன்பிறகு காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக இடம் வாங்கவேண்டும் என எவ்வளவோ முயன்றும் இதுவரை முடியவில்லை. எனவே புதிதாக காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். தலைவர்களை பின்பற்றி அனைவரும் தினமும் ஒரு மணி நேரமாவது மக்கள் பணியாற்ற வேண்டும்.
புதுச்சேரி மாநிலம் தற்போது சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா, நியமிக்கப்பட்டவருக்கு அதிகாரம் இருக்கிறதா? என தொடரப்பட்ட வழக்கில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்கிறது என நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக 2 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் நிலம், நிதி தொடர்பாக முடிவுகள் எடுக்கலாம்., அதே நேரத்தில் அதனை வரும் 21ம் தேதி வரை செயல்படுத்தக் கூடாது என கூறியிருக்கிறார்கள்.
இதில் என்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க நீதிமன்றம் கூறியிருக்கிறது. துணைநிலை ஆளுனர் கடந்த 10 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு, இந்த வழக்கில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக எவ்வாறு தொல்லை கொடுக்கலாம் என ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுப்பதை மட்டுமே கிரண்பேடி செய்தார். அவர், புதுச்சேரிக்கு ஒரு சாபக்கேடு. அவர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் செயல்படுவதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.
 கவர்னருக்கு எதிராக மீண்டும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். துணை நிலை ஆளுனராக இருப்பவர்களுக்கு மாநில வளர்ச்சியை பற்றி அக்கறை இல்லை. மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்றுக் கொடுக்காமல், அரசுக்கு ஒத்துழைக்காமல் தன்னிச்சையாக தொடர்ந்து செயல்படுகிறார். என்னுடைய வாழ்நாளில் நான் இதுபோன்ற ஒரு கவர்னரை பார்த்ததே இல்லை.
துளியும் மக்களுக்கு நல்லது செய்ய மனமில்லாதவர் கிரண்பேடி. தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வைத்திலிங்கம் வெற்றிபெற்றதற்கு காரணம் துணைநிலை ஆளுனர்தான். வைத்திலிங்கம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நினைத்திருந்தபோது, 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றிபெற வைத்துள்ளனர். இந்த தீர்ப்புக்கும் பிறகும் கிரண்பேடி திருந்தவில்லை. அவரை எதிர்த்து போராட நாம் தயாராக இருக்க வேண்டும். உங்கள் ஒத்துழைப்பும், கூட்டணி கட்சி தலைவர்கள் ஒத்துழைப்பும் இல்லாமல் போராட முடியாது. 6 நாட்களாக கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய போது, எங்களுக்கு மதச்சார்பற்ற தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.
தமிழகத்தில் உள்ள தலைவர்கள் எல்லாம் நேரில் வந்து நமது போராட்டத்துக்கு ஆதரவு தந்தார்கள். இருப்பினும் கவர்னர் தனது நிலைப்பாட்டை இதுவரை மாற்றிக் கொள்ளவில்லை. மத்தியில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது. இருப்பினும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை சந்திக்க நேரம் ஒதுக்கி கொடுக்குமாறு கேட்டுள்ளேன். கிடைத்தால் சந்தித்து மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை கேட்டுப்பெறுவேன்.
 புதுச்சேரியில் சுற்றுலா, தொழிற்சாலை, மனமகிழ் மன்றங்கள் உள்ளிட்ட திட்டங்களில் பலர் முதலீடு செய்ய தயாராக இருந்தும் எதற்கெடுத்தாலும் முட்டுக்கட்டைதான். துணை நிலை ஆளுனரின் ஏதேச்சதிகாரத்தை முறியடிப்போம். மக்களால் மிகவும் வெறுக்கப்படுபவராக கிரண்பேடி உள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இவ்வாறு அவர் பேசினார்.

Tags : governor ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...