அரசு மகளிர் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

நாமக்கல்,  ஜூன்  7: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று  அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடந்தது.  இதில்  ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்  அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பிஏ., தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம்,  வரலாறு, பொருளியல், வணிகவியல் மற்றும் பிஎஸ்சி கணிதம், இயற்பியல்,  வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் மற்றும்  ஊட்டச்சத்து என 13 வகையான இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளது. இந்த  பாடபிரிவுகளில் சேர, ஏப்ரல் 22ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை  விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் விளையாட்டு,  மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் என்சிசி  இடஒதுக்கீட்டின் படி, கடந்த மே 27ம் தேதியும், பிஎஸ்சி பாடப்பிரிவுகளுக்கு  மே 28ம் தேதியும், பிஏ பாடப்பிரிவுகளுக்கு மே 30ம் தேதியும், வணிகவியில்,  வரலாறு மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, கடந்த 3ம் தேதியும்  கலந்தாய்வு நடைபெற்றது.

முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில்,  நேற்று 2ம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது. இதில் பிஎஸ்சி கணிதம், இயற்பியல்,  வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல்,  ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் ஆகிய பிரிவுகளுக்கு கலந்தாய்வு  நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவிகள், தங்களது பெற்றோர்களுடன் வந்து  ஆர்வமுடன் பங்கேற்றனர். வரும் 10ம் தேதி பிஏ., பிகாம் ஆகிய  பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. 2ம் கட்ட  கலந்தாய்வுக்கு நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள்,  தங்களது பெற்றோர்களுடன் வந்திருந்தனர். ஆனால், கல்லூரி நிர்வாகம்  பெற்றோர்கள் போதுமான வசதியை செய்து கொடுக்கவில்லை. இதனால், அவர்கள் கல்லூரியின் 2வது நுழைவு வாயில் பகுதியில் தரையில் அமர்ந்து,  நாள் முழுவதும் காத்து கிடந்தனர். 

× RELATED அரசு மகளிர் கல்லூரி நுழைவு வாயிலில்...