×

அரியமங்கலம் குப்பை கிடங்கில் நள்ளிரவில் பற்றிய தீயை போராடி அணைத்த ஊழியர்கள் கண் எரிச்சல், தூக்கமின்மையால் மக்கள் அவதி

திருச்சி, ஜூன் 7: அரியமங்கலம் குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பற்றிய தீயை நேற்று மதியம் வரை மாநகராட்சி ஊழியர்கள் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தால் பகுதி மக்கள் கண் எரிச்சல், தூக்கமின்மையால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர்.
திருச்சி அரியமங்கலத்தில் 54 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 400 டன் வரை மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. இங்கு மக்கும் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள் அதிகரித்து விட்டதால், அவற்றை இயற்கை உரமாக தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இருப்பினும் தற்போது குப்பைகள் சேர்ந்து மலை போல் காட்சியளிக்கிறது. இந்த குப்பை குவியல்கள் சுமார் 30 அடி உயரம் வரை உள்ளது. இதில் கடந்த மாதம் திடீரென குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து 2 நாட்கள் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் குப்பை கிடங்கின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. இதில் அங்கு பணியில் இருந்த மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைத்துக் கொண்டிருந்தபோது, குப்பை கிடங்கின் பின் பகுதியான திடீர் நகர் பகுதியில் குப்பையில் தீப்பிடித்து எரிய துவங்கியது. தொடர்ந்து இருபுறத்திலும் பற்றிய தீயை மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து நேற்று மதியம் அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏற்பட்ட புகை மண்டலம் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொண்டதால் மிகுந்த கண் எரிச்சல் மற்றும் தூக்கமின்மையால் மக்கள் வேதனை அடைந்தனர்.

Tags : Ariyamangalam ,
× RELATED திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே...