×

கரைகள் ஆக்கிரமிப்பால் ஓடையாக மாறி வரும் தென்பெண்ணை ஆறு

கிருஷ்ணகிரி, ஜூன் 7: கரைகள் ஆக்கிரமிப்பால் தென்பெண்ணை ஆறு தற்போது ஓடையாக மாறி வருகிறது. மேலும், மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை ஆறு, கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் நந்தி மலையில் உற்பத்தியாகி, 430 கி.மீ தூரம் பாய்ந்து இறுதியில் தமிழகத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தென்பெண்ணை ஆறு. கர்நாடகா மாநிலத்தில் 112 கி.மீ தூரமும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 180 கி.மீ தூரமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 கி.மீ தூரமும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 106 கி.மீ தூரமும் பாய்ந்து, இறுதியில் கடலூரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தற்போது, போதிய மழை இல்லாததால் ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டது. இதனை பயன்படுத்தி ஆற்றின் இருபுறமும் ஆக்கிரமித்து, சிலர் விவசாயம் செய்து வருவதால், ஆற்றின் அளவு நாளுக்கு நாள் குறைந்து ஓடையாக மாறி வருகிறது. மேலும், ஆற்றின் இரு கரைகளிலும் தென்னை மரங்களை வைத்து, அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்பது போல் தோற்றத்தை ஏற்படுத்தி, ஆற்றில் மணலை கடத்தி செல்கின்றனர். இதனால், ஆற்றில் ஆங்காங்கே அதிகளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் பள்ளம் உள்ளது தெரியாமல் அப்பகுதிவாசிகளே நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே, தென்பெண்ணை ஆற்றை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருமணமான பெண் கடத்தல்