×

மாவட்டத்தில் பூத்து குலுங்கும் புளியமரங்கள்

தர்மபுரி, ஜூன் 7:  தர்மபுரி மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் புளியமரங்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால், நடப்பாண்டு அதிக மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் சாலை, பாப்பாரப்பட்டி சாலை, திருப்பத்தூர் சாலை, அரூர், சாலை, பாப்பிரெட்டிப்பட்டி சாலை, கடத்தூர் சாலை, திருவண்ணாமலை சாலை மற்றும் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் அதிகளவில் புளியமரம் வளர்க்கப்படுகிறது. புளியமரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை புளியம்பழம் அறுவடை செய்யப்படுகிறது. இரு மாதங்களுக்கு முன்பு புளி அறுவடை செய்யப்பட்டது. தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் காணப்படுகிறது. இதனால், புளியமரங்கள் அனைத்தும் பூத்து குலுங்குகின்றன. இலை, கிளைகளை மறைக்கும் அளைவுக்கு மரம் முழுவதும் பூக்கள் விட்டுள்ளது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

குறிப்பாக, பாப்பாரப்பட்டியில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் உள்ள அனைத்து புளியமரங்களிலும் ஒரே சீராக பூ பிடித்துள்ளது பார்க்க ரம்மியமாக உள்ளது. இந்த பூக்கள் அனைத்தும் பிஞ்சாகி, காய் படித்து கனிந்து அறுவடைக்கு வந்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக, பகலில் வெப்பமும், மாலை குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால், புளியமரங்கள் அதிக கிளைகளுடன் துளிர்த்து பூத்து குலுங்குகிறது. இதனால், நடப்பாண்டு மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது,’ என்றனர்.

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்