×

சிவகாசியில் உள்ள டாஸ்மாக் பார்களில் சுகாதாரமற்ற ‘சைடிஸ்’

சிவகாசி, ஜூன் 7: சிவகாசி பகுதிகளில் மதுக்கடை பார்களில் சுகாதாரமற்ற முறையில் பண்டங்கள் விற்கப்படுவதாக குடிமகன்கள் புலம்புகின்றனர். சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள் பார்களுடன் இயங்கி வருகின்றன. மேலும் ஏராளமான தனியார் பார்களும் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் மற்றும் தனியார் பார்களில் குடிமகன்களுக்கு சைடீஸ்களாக வெள்ளரி பிஞ்சு, பிஸ்கட் பாக்கெட், கடலை, ஆம்லேட், சிக்கன், மட்டன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.  இங்கு வெளியில் இருந்து பொருட்களை வாங்கி வரக்கூடாது. அவ்வாறு வாங்கி வந்தால் பாரில் அனுமதிப்பதில்லை.

அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் பார் உரிமையாளர்கள், தங்கள் இஷ்டம்போல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர். வெளியில் விற்பனை செய்யும் விலையைவிட இரண்டு மடங்கு கூடுதலாக விற்பனை செய்கின்றனர். இதனால் குடிமகன்களுக்கும் பார் ஊழியர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற முறையில் பொருட்களை தயாரித்து விற்கின்றனர். டாஸ்மாக் பாரில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் சுகாதாரமாகவும், தரமானதாகவும் தயார் செய்யப்படுகிறதா என உணவு ஆய்வாளர்கள் சோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குடிமகன்கள் கூறுகையில், ‘‘பார்களில் பொருட்களுக்கு பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளி கடைகளில் 10, 12 ரூபாயில் கிடைக்கும் மினி கோக் 18 ரூபாயும், 2 ரூபாய் மதிப்புள்ள பாதி கொய்யாப்பழம் 10 ரூபாய்க்கும், 2 ரூபாய் மதிப்புள்ள கடலை பருப்பு பாக்கெட், சேவு, மிக்சர் பாக்கெட் வகைகள் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகின்றனர். 10 ரூபாய் ஆம்லேட் 20 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். பார்களில் அனைத்து பொருட்களும் பலமடங்கு அதிகம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சரக்கைவிட சைடிஸ் செலவு எகிறிவிடுகிறது.  தினமும் பல ஆயிரம் மாமூல் கொடுக்கிறோம். எனவே வேறு வழியில்லாமல் தான் விலையை ஏற்றி விற்பனை செய்கின்றோம் என பார் உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும் சுகாதாரமற்ற முறையில் பொருட்களை சமைத்து விற்கின்றனர். அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Sivakasi ,Tasmag Bar ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து