×

ஏழாயிரம்பண்ணை வழியாக வெம்பக்கோட்டைக்கு பஸ் சேவை நிறுத்தம் மீண்டும் இயக்க வலியுறுத்தல்

சாத்தூர், ஜூன் 7: சாத்தூரிலிருந்து ஏழாயிரம்பண்ணை, வல்லம்பட்டி வழியாக வெம்பக்கோட்டைக்கு அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை தாலுகா புதிதாக உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் சாத்தூரிலிருந்து ஏழாயிரம் பண்ணை, வல்லம்பட்டி வழியாக வெம்பக்கோட்டைக்கு 2 ஆண்டுகளாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இப்பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மாவட்ட  ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று காலை, மதியம், இரவு என 3 நேரங்களில் மட்டும் சாத்தூரிலிருந்து, ஏழாயிரம்பண்ணை, வல்லம்பட்டி வழியாக வெம்பக்கோட்டைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து 2 ஆண்டுகள் இப்பேருந்து இயக்கப்பட்டதால் இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தொழிலாளர்களும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த பேருந்து சேவை மீண்டும் நிறுத்தப்பட்டது. இதனால் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு செல்பவர்களும், வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  

இதனால் ஏழாயிரம்பண்ணை, வல்லம்பட்டி, தூங்காரெட்டிபட்டி, கீழசெல்லையாபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தனியார் பேருந்தில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, சாத்தூரிலிருந்து, ஏழாயிரம்பண்ணை, வல்லம்பட்டி வழியாக வெம்பக்கோட்டைக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் கூறுகையில், ‘‘சாத்தூரிலிருந்து ஏழாயிரம்பண்ணை, வல்லம்பட்டி வழியாக வெம்பக்கோட்டைக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் கிராமமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். அவசரத்திற்கு வெளியில் செல்ல முடியவில்லை. எனவே இந்த பேருந்து சேவையை மீண்டும் இயக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

Tags : Vembukottai ,Elayayirampannai ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர் சாவு