×

தலைகீழாக மாறியது தேனி மாவட்டத்தின் பருவநிலை சாரல், ஈரக்காற்றால் விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதி

தேனி, ஜூன் 7: ஐந்து மாதங்களாக தேனி மாவட்டத்தில் சுட்டெரித்த வெயில் நேற்று முன்தினம் முதல் தலைகீழாக மாறியது. ஊட்டி, கொடைக்கானல், மூணாறுக்கு இணையான பருவநிலை நிலவியதால் விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். தேனி மாவட்டத்தில் எவ்வளவு வெயில் இருந்தாலும் காற்றில் ஈரப்பதம் இருப்பதால் வெயிலின் தாக்கம் பெரிய அளவில் மக்களை பாதிக்காது. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஜனவரியில் சுட்டெரிக்க தொடங்கிய வெயில் ஜூன் 5ம் தேதி வரை வெளுத்துக்கட்டியது. காற்றில் ஈரப்பதம் 38 சதவீதம் வரை குறைந்தது. இதனால் அனல் காற்று வீசியது. பொதுமக்கள், விவசாயிகள் தவித்துப்போயினர்.

மழை இல்லாமல் தோட்டக்கலை விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 5ம் தேதி மதியம் 2 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் மாறியது. 3 மணிக்கு வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து மேகங்கள் திரண்டு இருட்டுக் கட்டியது. திடீரென குளிர்ந்த சாரல் காற்றுடன் கூடிய இதமான பருவநிலை மாவட்டம் முழுவதும் உருவானது. மாலை 5.30 மணிக்கு சாரல் தொடங்கியது. சில இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் எல்லாப் பகுதிகளிலும் சாரல் மழை இரவு 10 மணி வரை பெய்தது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி: கூடலூரில் அதிகளவாக 10.7 மி.மீ., சண்முகாநதி அணைப்பகுதியில் 7 மி.மீ., உத்தமபாளையத்தில் 5.6 மி.மீ., வீரபாண்டியில் 5 மி.மீ., மஞ்சளாறில் 5 மி.மீ., சோத்துப்பாறையில் 4 மி.மீ., பெரியகுளத்தில் 2 மி.மீ., மழை அளவு பதிவானது. நேற்று காலையில் வெயில் இருந்தாலும் ஈரப்பதம் நிறைந்த காற்று வீசியதால் மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. நேற்று மதியமும் 3 மணிக்கு வழக்கம்போல் மேகங்கள் திரண்டு வெயிலை முற்றிலும் மறைத்தன. ஊட்டி, கொடைக்கானல், மூணாறு போல் தேனி மாவட்டத்தில் நிலவிய குளிர்ச்சியான பருவநிலை மக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Tags : Theni district ,civilians ,
× RELATED தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு...