×

ஜூன் 7, 2019 வெள்ளிக்கிழமை பாதாளத்திலும் பாய்ந்தது அணைகளின் நீர்மட்டம் 6.6.2019

உலகளவில் நிலப்பரப்பில் எவரெஸ்ட் சிகரம்தான் மிக உயரமானது. அதேபோல் கடல் பகுதியில், மரியானா அகழிதான் மிக ஆழமானது. எவரெஸ்ட் மலையின் உயரம், கடல் மட்டத்தில் இருந்து 8,848 மீட்டர். அதாவது 8.8 கி.மீ. ஆனால், பசிபிக் கடல்பகுதியில் உள்ள மரியானா அகழியின் ஆழம் 10,928 மீட்டர் அல்லது சுமார் 11 கி.மீ. இவ்வளவு பெரிய ஆழத்தில் சாதாரணமாக மனிதர்களால் செல்ல முடியாது. இதற்கென்று வடிவமைக்கப்பட்ட அதிநவீன நீர்மூழ்கி மற்றும் பிரத்யேக பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே, இந்த ஆழத்தில் செல்ல முடியும். இந்த சாதனையை கடந்த மாத தொடக்கத்தில் செய்திருக்கிறார், அமெரிக்காவைச் சேர்ந்த வெக்டர் வெஸ்கோவா என்ற முன்னாள் கடற்படை அதிகாரி.

உலகின் மிகப்பெரிய ஆழமான இடமான மரியானாவில், இதுவரை கண்டுபிடிக்கப்படாத மூன்று அரிய வகை உயிரினங்களை வெக்டர் கண்டுபிடித்துள்ளார். இதில் ஒன்று இறால் போன்ற தோற்றத்தில் இருக்கும் ரத்த உண்ணி. மற்றொன்று ஒளிரும் தன்மைக் கொண்ட மீன் இனமாகும். இந்த உயிரினங்களை கண்டுபிடித்தது, மரியானாவின் ஆழத்தை தொட்டுவிட்டு வந்தது போன்ற சாதனைகள் எல்லாம், அங்கு கிடந்த ஒரு சில பொருட்களால் சர்வ சாதாரணமாகிவிட்டது என்பதுடன், உலகளவில் மிகப்பெரிய விவாதத்தை தொடங்கி வைத்துவிட்டது என்பதுதான் இப்போதைய லேட்டஸ்ட் செய்தி.அதாவது மரியானா அகழியின் ஆழத்தில், மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கிடந்ததை வெக்டர் பார்த்துள்ளார்.

பிளாஸ்டிக் பயன்பாடு, பூமியில்தான் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றால், கடலிலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. கடலில் தற்போது ஏறத்தாழ 10 கோடி டன் பிளாஸ்டிக் பொருட்கள் கிடக்கின்றன என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக் பூதம் பூமியை பதம் பார்த்தது மட்டுமின்றி, கடலிலும் தன்னுடைய கோரப் பற்களால் பாதிப்பை ஏற்படுத்தி வருவது விஞ்ஞானிகளுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உடனடியாக பிளாஸ்டிக் பூதத்தை தடுக்காவிட்டால், அடுத்த சந்ததிகள் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்கின்றனர்.

Tags :
× RELATED இயற்கை நல உணவு பயிற்சி முகாம்