×

நிலக்கோட்டையில் சிறப்பு நலவாழ்வு முகாம்

செம்பட்டி, ஜூன் 7: நிலக்ேகாட்டையில் முறையாக தகவல் சொல்லாமல் கண்துடைப்பாக  சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தியதாக மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்தனர். நிலக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நேற்று நடைபெற்றது. முன்னதாக முகாம் குறித்து முறையான தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் முகாமிற்கு கடைசிநேர தகவல் கேட்டு குறைந்தளவே மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர். அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பியதுதான் வேதனை. முகாம் துவங்கிய ஒரு மணிநேரத்திலே மாவட்ட அலுவலர்கள், சிறப்பு மருத்துவர்கள் சென்று விட்டனர். இதனால் கை, கால் ஊனமுற்றவர்கள் மூன்று சக்கர வாகனம், உபகரணங்கள் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் அளிக்க முடியாமலும், உரிய பரிசோதனை முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் புதிதாக மாற்றுத்திறன் ஏற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களை மாவட்ட மாற்றுத்திறனாளி தனி அலுவலகத்திற்கு வர செல்லி திருப்பி அனுப்பினர். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், ‘முகாம் பற்றிய தகவலை சொல்லவே இல்லை. கடைசிநேரத்தில்தான் கேட்டு தாமதமாக வந்தோம். ஆனால் அதற்குள் அலுவலர்கள், மருத்துவர்கள் சென்று விட்டனர். இருந்தவர்களும் செல்போன் பேசி கொண்டும், வாட்அப், பேஸ்புக் பார்த்து கொண்டும் இருந்தனர். விண்ணப்பங்களை அளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம். கண்துடைப்பாக நடத்தும் முகாமை நடத்தாமலே இருந்திருக்கலாம்’ என்றனர். முன்னதாக முகாமை நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி துவங்கி வைக்க, நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன், அதிமுக ஒன்றிய செயலாளர் யாகப்பன், நகர செயலாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Special Welfare Camp ,
× RELATED பழநி நகரில் பல்வேறு இடங்களில்...