×

கொடைக்கானல் கோடை விழா மீன் பிடிக்கும் போட்டியில் உள்ளூர்காரர்கள் அசத்தல்

கொடைக்கானல், ஜூன் 7: கொடைக்கானல் கோடைவிழாவையொட்டி நடந்த மீன் பிடிக்கும் போட்டியில் 3 பரிசுகளையும் உள்ளூர்காரர்களே வென்று அசத்தினர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை விழா மலர் கண்காட்சியுடன் மே 30ம் தேதி துவங்கியது. ஜூன் 1ம் தேதி மலர் கண்காட்சி முடிந்த நிலையில் கோடை விழா ஜூன் 8 வரை நடைபெறவுள்ளது. வாத்து பிடிக்கும் போட்டி, நாய் கண்காட்சியை தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நேற்று காலை கொடைக்கானல் ஏரியில் மீன் பிடிக்கும் போட்டி நடந்தது. இதில் விரைவாக யார் மீனை பிடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். 10க்கும் மேற்பட்டோர் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் விரைவாக பெரிய மீனை பிடித்த கொடைக்கானலை சேர்ந்த அருமைநாயகம் முதல் பரிசை பெற்றார். அடுத்து இரண்டாம், மூன்றாம் பரிசுகள் முறையே கொடைக்கானலை சேர்ந்த செல்வம், பாபு பெற்றனர். மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார். போட்டியை கொடைக்கானல் மீன்வளத்துறை சார்பு ஆய்வாளர் தெய்வம், மேற்பார்வையாளர் ராஜகுரு ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

Tags : Kodikanal Summer Festival ,
× RELATED கொடைக்கானல் கோடை விழாவில் அலங்காரப் படகுகள் அணிவகுப்பு