×

கும்பகோணம் பகுதியில் பிளாஸ்டிக் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவித்தால் சன்மானம்

கும்பகோணம், ஜூன் 7: கும்பகோணம் பகுதியில் பிளாஸ்டிக் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று நகர்நல அலுவலர் பிரேமா தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் வடக்குவீதியில் பிளாஸ்டிக் பைகள் விற்கப்படும் கடைகள், குடோன்களில் நகர்நல அலுவலர் பிரேமா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், ஊழியர்கள் சோதனையிட்டனர்.
இதைதொடர்ந்து நகர்நல அலுவலர் பிரேமா நிருபர்களிடம் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக கும்பகோணம் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் வகையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 200 கடைகளில் சோதனையிட்டு 15 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 3 டன் பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றி கரிக்குளத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் இயந்திரம் மூலம் கூழாக்கியுள்ளோம்.
இவற்றை அரியலூரில் உள்ள சிமென்ட் நிறுவனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது. எந்தவொரு கடையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்தாலும் அவற்றை யாரிடமும் இதுவரை திருப்பி கொடுத்ததில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளில் நகராட்சி ஊழியர்கள் யாரேனும் ஈடுபடுவது தெரியவந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவர். தகுந்த ஆதாரத்துடன் இதுபற்றிய விபரங்களை தெரிவிக்கலாம். மேலும் நகராட்சி பகுதியில் எங்கு பிளாஸ்டிக் பைகள் விற்றாலும் உடனே நகராட்சிக்கு 8300085560 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். தகவல் தெரிவித்தவரின் ரகசியம் பாதுகாக்கப்பட்டு தக்க சன்மானம், பரிசு வழங்கப்படும். தடையை மீறி பிளாஸ்டிக் விற்ற வணிகர்களிடம் இருந்து இதுவரை ரூ.3 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : area ,Kumbakonam ,
× RELATED வாட்டி வதைக்கும்...