காவிரியில் தண்ணீர் பெற்று தர மத்திய, மாநில அரசுகள் முயற்சி கரூர் மாவட்டத்தை சேர்ந்தவிவசாயிகள் எதிர்பார்ப்பு

கரூர், ஜூன் 7: தென்மேற்கு பருவ மழை துவங்க உள்ளதால் விவசாயிகள் நீர் திறப்பை எதிர்பார்த்துள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதத்தில் துவங்கும். கேரளா, கர்நாடகா தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை அதிக அளவில் இருக்கும். செப்டம்பர் மாதம் வரை 70 சதவீதம் மழை தென்மேற்கு பருவமழையின் மூலமாக கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். காவிரியில் நீர் வரத்து போதுமான அளவில் இல்லை. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படவில்லை.
கேரள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால்தான் அமராவதி அணைக்கு தண்ணீர் வரும். இதுவரை மழையில்லாததால் அணைக்கு தண்ணீர் வரவில்லை. வெறும் 70 அடி தான் தண்ணீர் வரத்து இருப்பதால் அணையில் இருந்து நீர் திறப்பும் இல்லை. காவிரியாற்றிலும் நீர் வரத்து குறைவாகவே இருக்கிறது. மாயனூர் காவிரி கதவணைக்கு 427 கனஅடி நீர் வரத்து உள்ளது. இங்கிருந்து 177 கன அடி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. குடிநீர் உபயோகத்திற்கு மட்டுமே இப்போதைய நீர் போதுமானதாக இருக்கிறது.
மேடான பகுதியில் உள்ள உள்ளாட்சி மன்ற நிர்வாக நீர் உறிஞ்சு கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டாவது குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காவிரி பாசன பகுதிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. அதற்கு முன்னர் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தென்மேற்கு பருவ மழைப்பொழிவு அதிகமாக இருந்தால் தான் காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரும். தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் உழவுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மண் பரிசோதனை செய்து என்ன பயிரிடலாம் என்பதை தெரிவிப்பதில் வேளாண் துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும். தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை பெற்றுத்தர மாநில அரசு உரிய முன் முயற்சிகளை எடுக்க வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தி தண்ணீர் பெற்றத்தந்தால் தான் இந்த ஆண்டாவது குறுவை சாகுபடி செய்ய இயலும் என்றனர்.

Tags : State ,Governments ,Karur district ,Central ,Kaveri ,
× RELATED மத்திய, மாநில அரசுகளை வெளியேற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்