×

தீவிரமாகும் குடிநீர் பிரச்னை தண்ணீரின்றி வறண்ட கலவகுண்டா அணை சித்தூர் மக்களின் நீராதாரமாக விளங்கி வந்தது

சித்தூர் ஜூன் 7: சித்தூர் மக்களின் நீராதாரமாக விளங்கும் கலவகுண்டா அணை கொளுத்தும் வெயில் காரணமாக தண்ணீரின்றி வறண்டு பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் பிரச்னை இன்னும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் மொத்தம் 2,671 ஏரிகளும், 4,843 குளங்களும் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஏற்பட்ட புயலால் சித்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் நிரம்பின. இதனால் சித்தூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக போதியளவில் மழை பெய்யாததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் குளங்களும் வறண்ட பாலைவனமாக மாறியுள்ளது.

இருப்பினும் இந்த ஆண்டு சித்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவில்லை. இதனால் சித்தூர் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. பெரும்பாலான கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். நகர்புறங்களிலும் குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. குடிநீர் பிரச்னையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் 3 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் கிடைப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே சித்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: சித்தூர் மாவட்டத்தில் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கோடை வெயிலின் தீவிரத்தால் பெரும்பாலான அணைகள், ஏரி, குளம், குட்டைகள் வறண்டு கிடக்கிறது. நிலத்தடி நீர் மட்டமும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் விவசாய நிலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும் விவசாய நிலங்களில் போர்வெல் அமைத்தாலும் தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது சித்தூர் மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் கலவகுண்டா அணையில் கொளுத்தும் வெயிலால் தண்ணீர் வற்றி குட்டைபோல் காட்சியளிக்கிறது. அணையின் பெரும்பாலான பகுதிகளில் பாளம், பாளமாக வெடித்து கிடக்கிறது. இதனால் தண்ணீர் பிரச்னை இன்னும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர் பிரச்னையை தீர்க்க கலவகுண்டா அணையின் ஓரிடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி 5 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மேற்கொண்டு பணிகள் நிறைவுபெறாததால் தண்ணீருக்காக பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். மேலும் மாநில அரசு சித்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் குளங்களையும் முறையாக தூர்வாராததால் பெய்யும் மழைநீரையும் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டாவது மாநில அரசு ஏரி, குளங்களை தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் வனப்பகுதியில் இருந்து வரும் கால்வாய்களை சீரமைத்து, ஏரிக்கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும். இதனை செய்தாலே மாவட்டத்தில் ஏற்படும் தண்ணீர் பிரச்னையை முற்றிலுமாக தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : dam ,source ,Chittor ,
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...