திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர், ஜூன் 7: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் இன வகுப்பினர் தங்கி பயிலும் வகையில் 36 அரசு விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ₹1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும், மாணவர்கள் வசிக்கும் இடத்திற்கும் 8 கிமீ தூரம் இருக்க வேண்டும். மாணவியர்களுக்கு இந்த விதி பொருந்தாது. அரசு விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அரசு கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அனைத்து விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உணவும், உறைவிடமும் அளிக்கப்படும். விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து அவர்களிடமே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.    

Tags : government hostels ,district ,Tiruvallur ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் 800 பேர் பாதிப்பு...