×

அம்பத்தூர், கொரட்டூர் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டு உபயோக சிலிண்டர்களை ஓட்டல்களுக்கு விற்று முறைகேடு

ஆவடி, ஜூன் 7: சென்னை புறநகர் பகுதியில் வீட்டு உபயோக சிலிண்டர்களை தனியார் நிறுவன ஊழியர்கள் ஓட்டல்களுக்கு முறைகேடாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சிலிண்டர்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியில் அம்பத்தூர், கொரட்டூர், பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயல், ஆவடி, கோவில்பதாகை,  பட்டாபிராம், திருநின்றவூர், மதுரவாயல், பூந்தமல்லி, போரூர், புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கு மேற்பட்ட தனியார் காஸ் நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகளுக்கு தனித்தனி எடை கொண்ட சிலிண்டர் சப்ளை செய்யப்படுகிறது. வீடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டரை கடைகளுக்கு சப்ளை செய்ய கூடாது என்ற சட்ட விதிமுறை உள்ளது. ஆனால் இந்த பகுதிகளில் வீட்டு உபயோக சிலிண்டர்களை சாலையோர தள்ளு வண்டி டிபன் கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள், பாஸ்ட் புட் கடைகள், பிரியாணி கடைகள் உள்ளிட்டவைகளுக்கு தனியார் நிறுவன காஸ் ஊழியர்கள் விதியை மீறி விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘வீட்டு  உபயோக சிலிண்டரை விட கடைகளுக்கு பயன்படுத்தும் வணிக சிலிண்டரின் விலை இரு மடங்கு ஆகும். இதனால் தான் வீட்டு உபயோக சிலிண்டர்களை கடைகளுக்கு ஊழியர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக காஸ் ஏஜென்சி ஊழியர்கள் வியாபாரிகளிடம் குறிப்பிட்ட தொகை கமிஷனாக வாங்கி விட்டு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பதிவு செய்தும் உரிய காலத்தில் காஸ் சிலிண்டர்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி நடக்கும் முறைகேடுகள் குறித்து தனியார் காஸ் ஏஜென்சி நிறுவனங்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். புதிதாக காஸ் சிலிண்டர் கேட்டு ஏஜென்சியிடம் விண்ணப்பித்தால் பல ஆவணம் கேட்டு தொல்லை செய்கின்றனர். ஆனால் எவ்வித ஆவணமும் இல்லாமல் ஓட்டல்கள், கடைகளுக்கு வீட்டு உபயோக சிலிண்டர்களை ஊழியர்கள் விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.

மேலும் திருமண மண்டபங்கள், மதுபான கூடங்கள் போன்றவற்றிக்கும் வீட்டு உபயோக சிலிண்டரை ஊழியர்கள் விற்கிறார்கள். இதனை தடுக்க வேண்டிய  உணவு பொருள் வழங்கல் துறை, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, காஸ் நிறுவனங்களின் அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. இதற்கு முன்னர் மேற்கண்ட  துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து முறைகேடாக பயன்படுத்தும் சிலிண்டர்களை பறிமுதல் செய்வது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுக்கு மேலாக அதிகாரிகள் எந்த சோதனையும் செய்யாமல் உள்ளனர். இதனால் தனியார் காஸ் நிறுவன ஊழியர்கள் முறைகேட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஊழியர்கள் காஸ் சிலிண்டர் ஒன்றை வாடிக்கையாளருக்கு சப்ளை செய்ய கூலியாக ₹50 வரை பெறுகின்றனர். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் காஸ் ஏஜென்சி நிறுவனத்திடம் புகார் செய்தாலும் கண்டுகொள்ளுவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுப்படும் காஸ் நிறுவன ஊழியர்கள் மீதும், முறைகேடாக பயன்படுத்தும் சிலிண்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : hotels ,Korattur ,Ambattur ,
× RELATED இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர்: வாலிபர் சிறையில் அடைப்பு