×

பெரும்புதூர் அருகே பரபரப்பு மருத்துவர்கள் அலட்சியத்தால் கிட்னி பாதித்த நோயாளி பலி

சென்னை, ஜூன் 7: பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம், குண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (51). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவன காவலாளி. இவரது மனைவி சுகுணா (43). தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர்.
கடந்த 20ம் தேதி ரகுபதிக்கு கிட்னி பாதிப்பு காரணமாக பெரும்புதூர் அருகே தண்டலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 31ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர், ரகுபதி தொடர் சிகிச்சையில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு திடீரென ரகுபதி வாந்தி எடுத்தார். பின்னர் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். இதை பார்த்த மனைவி சுகுணா அங்கு பணியில் இருந்த டாக்டரிடம் ஓடி சென்று கூறியுள்ளார்.
ஆனால் அதிகாலை 2 மணி வரை ரகுபதியை பரிசோனை செய்ய எந்த டாக்டரும் வரவில்லை என கூறப்படுகிறது. அதன் பிறகு, ரகுபதி இறந்து விட்டார். இதை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதில் ஆத்திரமடைந்த ரகுபதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாக்டரிடன் அலட்சியத்தால் ரகுபதி உயிரிழந்ததாக கூறி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் மருத்துவமனை வாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து பெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது உறவினர்கள், ‘‘நேற்றிரவு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. டாக்டரை அழைத்தபோது 6 மணி நேரத்துக்கு மேலாகியும் யாரும் வரவில்லை. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் ரகுபதி இறந்தார். இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Kidney sufferer ,victims ,Perumbupur ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்