×

பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தில் திரவுபதை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ஊத்துக்கோட்டை, ஜூன் 7: பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தில் அருள்மிகு  ஸ்ரீ திரவுபதை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் தரிசனம் பெற்று சென்றனர். பெரியபாளையம் அருகே உள்ள வெங்கல் கிராமத்தில் அருள்மிகு பூமி நீலா சமேத சென்ன கேசவ பெருமாள் திருக்கோயிலை சார்ந்த நூற்றாண்டு கால பழமை வாய்ந்த கிருஷ்ண விநாயகர்,  திரவுபதை அம்மன் சமேத பஞ்ச பாண்டவர்கள் மற்றும்  வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழா கடந்த 4ம் தேதி மாலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம், முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
மறுநாள் 5ம் தேதி 9 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 3 மணிக்கு சேலத்தை சேர்ந்த இலக்கிய புலவர்  தேவி குணசேகரன் சொற்பொழிவும், பின்னர் 3ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. 6ம் தேதியான நேற்று காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் ராகவா பட்டாச்சாரியார் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் யாக சாலையில் இருந்து புனித நீருடன் ஊர்வலமாக கோயிலை வலம் வந்து கோபுர கலசத்தில்ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் கோயில் முன்பாக குழுமி இருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவை சேர்ந்த சீனிவாசன், பாஸ்கரன், சிவபிரசாத், வேலு, சுந்தரமூர்த்தி, ராஜேந்திரன், குப்பன், புருஷோத்தமன், முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Amman ,village ,kumbabhishekam gokalampu ,Periyapalayam ,Venkal ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா