×

கேளம்பாக்கத்தில் துப்புரவு ஊழியரை தாக்கிய அதிமுக பிரமுகரை கண்டித்து சாலை மறியல்

திருப்போரூர், ஜூன் 7: சென்னையை அடுத்த புறநகர் பகுதியான கேளம்பாக்கம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்ப்பவர் கபாலி (55). இவர் தனது சக ஊழியர்கள் கம்சலா, சாந்தி, உதயா, நாகம்மாள் ஆகியோருடன் நேற்று காலை கேளம்பாக்கம் ஊராட்சி சாத்தங்குப்பம் எஸ்ஆர்எஸ் நகரில் துப்புரவு பணியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த அதிமுக பிரமுகர் வினோத்கண்ணன் என்பவர், துப்புரவு பணியாளர்களை தரக்குறைவாக பேசி ஒழுங்காக குப்பை அள்ளுவதில்லை  என கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த பணியாளர்கள், போதிய ஆட்கள் இல்லை என்றும், அதிகளவில் குப்பைகள் சேருவதால் உடனடியாக அகற்ற முடிவதில்லை என்றும், மாலைக்குள் அகற்றி விடுவதாகவும் கூறியுள்ளனர்.
அதற்கு, நடப்பது எங்கள் ஆட்சி, என்னையே எதிர்த்து பேசுகிறாயா என்று கேட்டு வினோத்கண்ணனும், அவரது தந்தை மனோகரன் என்பவரும் துப்புரவு பணியாளர் கபாலியை, அசிங்கமாகத் திட்டி அவரை எட்டி உதைத்தனர். இதனால் கீழே விழுந்த அவரை, சக பணியாளர்கள் தூக்கி நிறுத்தினர். இதையடுத்து காயமடைந்த அவருக்கு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

துப்புரவு பணியாளர் கபாலி தாக்கப்பட்டதை அறிந்ததும், மற்ற பணியாளர்கள் அனைவரும் அதிமுக பிரமுகர் வினோத்கண்ணன், அவரது தந்தை மனோகரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பழைய மாமல்லபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு, துப்புரவு பணியாளரை தாக்கியவர் அதிமுக பிரமுகர் என்பதால்  சமாதானமாக போகும்படி போலீசார் கூறியதாக தெரிகிறது. ஆனால், அதை ஏற்க மறுத்து பணியாளர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் வினோத்கண்ணன் மற்றும் மனோகரன் ஆகியோர் மீது துப்புரவு ஊழியர்களை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவர்களை, வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : cleaning staff ,AIADMK ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...