×

உத்திரமேரூர் அடுத்த பட்டாங்குளம் கிராமத்தில் பல நூற்றாண்டு குளத்தை ஆக்கிரமிக்க முயற்சி

உத்திரமேரூர், ஜூன் 7: உத்திரமேரூர் அடுத்த பட்டாங்குளம் கிராமத்தில் உள்ள பல நூற்றாண்டு குளத்தை, மர்மநபர்கள் சிலர் ஆக்கிரமிக்க முயன்றனர். இதை அறிந்த பகுதி மக்கள், அவர்களை விரட்டியடித்தனர். உத்திமேரூர் அடுத்த பட்டாங்குளம் கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன், மன்னர்கள் காலத்தில், மக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க இந்த குளம் அமைக்கப்பட்டது. பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் இந்த குளத்தின் நடுவே, வட்ட வடிவிலான பெரிய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் கோடைகாலத்திலும் நீர் வற்றாமல் காணப்படுகிறது. இந்த குளத்தின் தண்ணீர், இந்த கிராம மக்களுக்கு பெரிய நிராதாரமாக விளங்குகிறது. குளத்தின் அருகில் கிராம தேவதையான ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில், விநாயகம் கோயிலும் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் இந்த கோயில்களில், கிராம மக்கள் ஒன்றிணைந்து பெரியளவிலான திருவிழா நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் இந்த குளத்தின் அருகே சிலர் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த நிலத்தை விற்பனை செய்தவர்கள், குளத்தையும் சேர்த்து வாங்கியதாக கூறி வந்தனர். மேலும், குளம் தங்களுக்கு சொந்தம் எனவும், அதனை யாரும் பயன்படுத்தாமல் இருக்க தடுப்பு அமைக்க முடிவு செய்ததாக, பொதுமக்கள் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை, மேற்கண்ட குளத்தின் அருகே சிலர் வந்தனர். திடீரென அவர்கள், குளம் தங்களுக்கு சொந்தமானது. அதற்கு வேலி அமைக்கிறோம் என கூறி, குளத்தை சுற்றியுள்ள செடி கொடிகளை அகற்றினர். இதை அறிந்ததும், கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.கிராம மக்களுக்காக பல நூற்றாண்டை கடந்து இந்த குளம் இருக்கிறது. இதை யார் விற்பனை செய்தது என கேட்டனர். அதற்கு, இந்த குளத்தை அமைத்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், தங்களுக்கு எழுதி கொடுத்ததாகவும், அந்த இடத்தை அளவீடு செய்ய தாலுகா அலுவலகத்தில், மனு கொடுத்துவிட்டு வந்ததாகவும், மர்மநபர்கள் கூறினர்.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், பொய்யான தகவலை கூறி, கிராம மக்களின் பொது குளத்தை ஆக்கிரமிக்க வந்தீர்களா என கேட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர், கிராம மக்களுக்கு ஆதரவாக பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்களும் அங்கு வந்தனர். உடனே மர்மநபர்கள், அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள இந்த குளம், பல ஆண்டுகளுக்கு முன், எங்களது முன்னோர்களால் அமைக்கப்பட்டது. கோடைகாலத்தில் கடும் வறட்சி நிலவும் நேரத்திலும், கிராம மக்கள் பயனடையும் வகையில் குளத்தை அமைத்து கொடுத்துள்ளனர். இந்த குளத்தின் நீரினை பட்டாங்குளம், வினோபா நகர், பருத்திக்கொல்லை, மல்லியங்கரணை, சிறுங்கோழி, தளவராம்பூண்டி என சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர். இந்த வேளையில், இந்த குளத்தினை சொந்தம் கொண்டாடி கொண்டு சிலர் ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர். இதனை நாங்கள் தடுத்விட்டோம். ஆனால், மர்மநபர்கள் போலியான பத்திரம் தயார் செய்து வந்தால், அரசு அதை ஏற்க கூடாது. பொதுமக்களிடம் கருத்து கேட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும். நீர்நிலையை காக்க வேண்டும். இதுகுறித்து, உத்திரமேரூர் வட்டாட்சியரிடம் பட்டாங்குளம் கிராம மக்கள் புகார் அளிக்க இருகிறோம் என்றனர்.

Tags : Uthiramerur ,pond ,village ,Pattangulam ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...