×

மழைநீர் கால்வாயை சீரமைக்காததை கண்டித்து கழிவுநீர் சகதியை எடுத்து வந்து மாநகராட்சியில் மக்கள் நூதன புகார்

திருவொற்றியூர்: கத்திவாக்கத்தில் மழைநீர் கால்வாயை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து, கழிவுநீர் சகதியை பக்கெட்டில் எடுத்து வந்து மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 2வது வார்டுக்கு உட்பட்ட கத்திவாக்கம், நேரு நகர், பஜனை கோயில் தெருவில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால், பொதுமக்கள் தங்களது வீடுகளில் தொட்டி அமைத்து கழிவுநீரை தேக்கி, பின்னர், பணம் கொடுத்து தனியார் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். வீடுகளில் துணி துவைப்பது, குளிப்பது போன்ற அன்றாடம் பயன்படுத்தக்கூடிய நீரை தெருவோரம் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மழைநீர் கால்வாயில் விடுகின்றனர். இந்த மழைநீர் கால்வாயை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால், குப்பை குவியலாகவும்,  பல இடங்களில் கால்வாய் உடைந்தும் காணப்படுகிறது.

இதனால், கால்வாயில் நீரோட்டம் தடைபட்டு, நாள் கணக்கில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கால்வாயை தூரிவாரி, சீரமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பஜனை கோயில் தெருவில் உள்ள மழைநீர் கால்வாயில் தேங்கிய கழிவுநீர் சகதியை பக்கெட்டில் எடுத்து, அதை மூன்று சக்கர சைக்கிளில் வைத்து கத்திவாக்கம் பஜார் தெருவில் உள்ள  மாநகராட்சி  உதவி பொறியாளர்  அலுவலகத்திற்கு  கொண்டு வந்தனர். இதை பார்த்த அதிகாரிகள் வெளியே ஓடி வந்து, ‘‘கழிவுநீர் சகதியை இங்கு ஏன் கொண்டு வருகிறீர்கள்,’’  என கேட்டு அவர்களை தடுத்து நிறுத்தினர். அதற்கு, ‘‘நீங்கள் மழைநீர் கால்வாயை முறையாக பராமரிக்காததால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதில் கொசு உற்பத்தியாவதால், நோய் பாதிப்பில் தவித்து வருகிறோம். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது, மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீரை உங்களிடம் காண்பிக்க கொண்டு வந்துள்ளோம். இதை பார்த்தாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

உடனே அதிகாரிகள், மழைநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி அவர்களை  சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பஜனை கோயில் தெருவில்  மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவி வருகிறது. இதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. சாலையும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறோம். எனவே, தூர்ந்துள்ள மழைநீர் கால்வாயை சீரமைத்து இங்கு சாலை அமைக்க வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்,‘‘ என்றனர்.

Tags : rain water canal ,
× RELATED பெரியபாளையம் எம்.ஜி.ஆர் நகர்...