×

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட எஸ்ஐ.க்கு ₹25 ஆயிரம் அபராதம்

சென்னை: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணைய நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுகா தண்டரை புதுச்சேரியைச் சேர்ந்தவர் கணபதி (30). இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: போலி ஆவணங்கள் மூலம் எனக்கு சொந்தமான நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த 2013ம் ஆண்டு மதுராந்தகம் போலீசில் புகார் செய்தேன். இந்த புகாரை அப்போதைய மதுராந்தகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் விசாரணை செய்தார். அவர், எனக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பகுதியை, அபகரிக்க முயற்சிக்கும் நபர்களுக்கு எழுதி கொடுக்கும்படி நிர்ப்பந்தம் செய்தார். நான் மறுத்ததால் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் என்னை கடுமையாக தாக்கினார்.

மேலும், என்னை சிறையில் வைத்து கொன்று விடுவதாக மிரட்டினார். அதனால் பலத்த காயமடைந்த நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். எனவே, எனது நிலத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு, என்னை கடுமையாக தாக்கி மனஉளைச்சர் ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பட்டிருந்தார். இந்த வழக்கு மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும் போது சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு இருப்பது தெரிகிறது. எனவே அவருக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு 4 வாரத்துக்குள் வழங்கி விட்டு, சப்-இன்ஸ்பெக்டரிடம் இருந்து வசூலித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...