அரசு பள்ளி மேற்கூரை இடிந்து சேதம்

பந்தலூர், ஜூன் 5: பந்தலூர் அருகே தேவாலா அட்டி அரசு பள்ளி சமையல் அறை மேற்கூரை இடிந்து சேதமடைந்தது.  தேவாலா அட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ள சமையல் அறையின் சிமென்ட் மேற்கூரை பழுதடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை சமையல் அறையில் சமைக்கும் பணியில் பெண் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சிமென்ட் சீட் கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக பெண் ஊழியர்கள் உயிர் தப்பினார். இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜ் கூறுகையில், ‘‘சமையல் அறை மேற்கூரை பழுதடைந்த நிலையில் இருந்து வந்தது. இதை  சீரமைக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால், இச்சம்பவம் நடந்துள்ளது,’’ என்றார். கூடலூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்  கிருஷ்ணபிரசாத், ‘‘உடனடியாக சமையல் அறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Tags :
× RELATED மழையால் உளுந்து பயிர் சேதம்