×

மேட்டுப்பாளையத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயரும் அரசு பள்ளிகள்

மேட்டுப்பாளையம்,ஜூன்  5: மேட்டுப்பாளையம்  பகுதியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு  பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் இந்த அரசு பள்ளிகளில் மாணவர்  சேர்க்கை அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்,  சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார்  பள்ளிகளின் வரவால் கடந்த ஆண்டுகளில் அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை  குறைந்து வந்தது. பல இடங்களில் குழந்தைகள் இல்லாமல் பள்ளிகள் மூடப்பட்டன.  இதில் அதிகம் பாதிக்கப்பட்டது கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் தான்.  தனியார் பள்ளிகளின் வரவால் எளிமையாக கற்க வேண்டிய, ஆரம்ப கல்வி  குழந்தைகளுக்கு கடினமானது.  இதை தொடர்ந்து அரசு சமச்சீர் கல்வி  திட்டம் கொண்டு வந்து அரசு பள்ளிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்தியது.  மேலும் அரசு பள்ளிகளில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ‘ஸ்மார்ட் கிளாஸ்’  உருவாக்கப்பட்டது.
 
மேலும் ஆரம்ப கல்வியை பயில வரும் மாணவர்களுக்கு எளிய  முறையில் விளக்கும் வாழ்வியல் முறை, கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள், வண்ண  ஓவியங்கள் வகுப்பறைகளில் வரைந்தனர். இது அரசு பள்ளிகள் மீதான  பெற்றோர்களின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் படிப்படியாக  அரசு பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. இந்தாண்டு  மேட்டுப்பாளையத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில் ஆரம்ப கல்வியை கற்க வரும்  குழந்தைகள், பள்ளிக்கு சென்று வர தனியார் பங்களிப்புடன் ஆட்டோ ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. மேலும் காலையில் பால் மற்றும் பிஸ்கெட் சுண்டல் ஆகியவை  வழங்கபட்டது. பெற்றோர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதன் மூலம்  தனியார் பள்ளியில் ஆரம்ப கல்விக்கு செலவிடும் பணத்தை குழந்தைகளுக்கு  டெப்பாசிட் செய்தால், எதிர்கால உயர் கல்விக்கு அது உதவும் என அரசு பள்ளி  ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேட்டுப்பாளையம் பகுதியில் அரசு  பள்ளிகளில் தன்னார்வலர்கள் மூலம் செய்யப்படும் உதவிகள் மற்றும்  ஆசிரியர்களின் முயற்சிகளால்  அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக  உயர்ந்து வருகிறது.

Tags : Government schools ,schools ,Mettupalayam ,
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...