×

பாலிடெக்னிக், சொசைட்டி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறையும் வகுப்புகள் நீக்கப்படும்

புதுச்சேரி, ஜூன் 5:  புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் எந்த வகுப்பில் மாணவர் சேர்க்கை 50 சதவீதத்துக்கும் கீழ் குறைகிறதோ, அந்த வகுப்புகள் நீக்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டசபை கமிட்டி அறையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் பாடப்பிரிவுக்கான தகவல் கையேட்டை அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளில் பள்ளி கல்வி மற்றும் உயர்க்கல்வியில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்திருக்கிறோம். பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே 10ம் வகுப்பில் 7 சதவீதமும், 12ம் வகுப்பில் 12 சதவீதமும் கடந்தாண்டைவிட தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருக்கிறது.

ஆசிரியர் பற்றாக்குறை, பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகளை கடந்து கல்வித்துறை செயலர், இயக்குநர், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் முயற்சியால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக கலை, அறிவியல் கல்லூரியில் கூடுதல் இடங்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்களை அதிகப்படுத்தி உள்ளோம்.  2015-16ம் ஆண்டு கல்லூரிகளில் 3,564 இடங்கள் இருந்தன. இதனை 2016-17ல் 3,858 ஆகவும், 2017-18ல் 5,068 ஆகவும், 2018-19ல் 5,199ஆகவும் உயர்த்தினோம். இந்தாண்டு 6,475 இடங்களாக உயர்த்தியுள்ளோம். அதாவது 1,276 சீட் உயர்த்தப்பட்டுள்ளது. இது 25 சதவீதம் அதிகமாகும்.

கடந்தாண்டு ஆன்-லைன் மூலமாக அனைத்து கல்லூரிகளுக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுத்தோம். அப்போது சில குறைபாடுகள் எங்களுடைய கவனத்திற்கு வந்தது. அதனை சரி செய்து உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்தாண்டு ஆன்-லைன் சேர்க்கைக்கான பணிகள் நடைபெற்ற வருகிறது. அதேபோல் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை பணிகள் சரியான முறையில் நடைபெற்று வருகிறது. பிளஸ்-1ல் அனைவருக்கும் இடம் கிடைக்கும், தேவைப்பட்டால் இடங்களை அதிகரித்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாணவர்கள் சேர்ந்தது போக மீதியுள்ள இடங்களில் தமிழக மாணவர்களை சேர்த்து கொள்ளவும் அனுமதி கொடுத்துள்ளோம். ஒப்பந்த அடைப்படையில் தகுதியான பேராசிரியர்கள் 150 பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கல்லூரிகளுக்கும் 3 மாதங்களுக்குள் நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவர். பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்குவது தொடர்பாக அமைச்சரவையில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் கூறும் பெற்றோர்கள், தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழை பெற்று வந்து பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கலாம். தமிழக அரசு முதலில் தங்கள் மாநில பிள்ளைகளுக்கு பாட நூல்களை வழங்கிவிட்டு, பின்னர் புதுச்சேரிக்கு வழங்குகிறது. இதனால் புதுச்சேரி பிள்ளைகளுக்கு பள்ளி துவங்கிய முதல் வாரத்தில் பாடநூல்களை வழங்கி விடுவோம். தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க இருக்கும் உணவு இன்னும் 6 மாத காலத்திற்கு தள்ளி போகும். ஏற்கனவே 405 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தோம். அதற்கு அனுமதி அளித்த நிர்வாகியே மறுஆய்வு செய்ய கோரி நிறுத்தினார். தற்போது விதியில் சிறு திருத்தம் செய்து, மீண்டும் குறுகிய காலத்தில் விண்ணப்பங்களை பெற்று விரைவில் நிரப்பப் நடவடிக்கை எடுக்கப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று (நேற்று) மாலை 5 மணி முதல் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
 தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு அரசு ரூ.1.05 லட்சம் ஆண்டுக்கு செலவு செய்கிறது. ஒரு வகுப்பில் 60 மாணவர்கள் படிக்கும்போது இந்நிலை. இதுவே, மாணவர்களின் எண்ணிக்கை குறைய, குறைய செலவுத்தொகை அதிகரிக்கும். எனவே பாலிடெக்னிக் மற்றும் அரசு சொசைட்டி கல்லூரிகளில் எந்தெந்த வகுப்பில் 50 சதவீதத்துக்கும் கீழ் மாணவர் சேர்க்கை குறைகிறதோ, அந்த வகுப்பை நீக்கி விடுவோம். எனவே, அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறையாமல் இருக்க பெற்றோர்களும், மாணவர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

புதுவையில் கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தினால் அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களை தான் தனியார் பள்ளிகளில் அரசு இடஒதுக்கீடாக பெறும் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டி இருக்கும். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதுடன், நிதி நெருக்கடியில் உள்ள அரசிற்கு கூடுதல் செலவும் ஏற்படும். இருப்பினும், அடுத்த கல்வி ஆண்டில் கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கல்வித்துறை செயலர் அன்பரசு, உயர் கல்வித்துறை இயக்குநர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு, தாகூர் கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ், கதிர்காமம் இந்திரா காந்தி கல்லூரி முதல்வர் குமரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : colleges ,
× RELATED இலவச கண் சிகிச்சை முகாம்