×

விருதுநகர் மாவட்ட மைய நூலக படிக்கட்டுகளில் குவிந்து கிடக்கும் புத்தக கட்டுகள்

விருதுநகர், ஜூன் 5:  விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில், மாடிப்படிக்கட்டுகளில், குவித்து வைத்திருக்கும் புத்தக கட்டுகளால், வாசகர்கள் மாடிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். விருதுநகர் மாவட்ட தலைமை நூலகத்தின் கட்டுப்பாட்டில் 93 கிளை நூலகங்கள், 55 ஊர்ப்புற நூலகங்கள், 4 பகுதி நேர நூலகங்கள் என மொத்தம் 152 நூலகங்கள் உள்ளன. இந்நிலையில், விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் உள்ள தலைமை நூலகத்தின் தரைத்தளத்தில் இரவல் நூல்களும், முதல் மாடியில் சிறுவர் நூலகம் மற்றும் குறிப்புதவி நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. இரண்டாது மாடியில் இருந்த மாவட்ட நூலக அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகத்தில், புதிய கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்ததால் காலியாக உள்ளது.

இந்நிலையில், மாவட்ட தலைமை நூலகத்திற்கு கடந்த மார்ச் மாதம் புதிதாக வந்த 3 லட்சம் நூல்களை வைக்க இடமின்றி மாடிப்படிகளிலும், வாசகர்கள் அமரும் இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வர உள்ள லட்சக்கணக்கான நூல்களை எங்கே வைப்பது என தெரியாமல் திணறி வருகின்றனர். ஒரே நேரத்தில் இரு நிதிகளின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களை பிரித்து கிளை நூலகங்களுக்கு அனுப்ப முடியாத நிலையில் புத்தக பண்டல்கள் படிக்கட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மாடிப்படிகளில் நூல்கள் குவிந்து கிடப்பதால் வாசர்கள் மாடியேறி குறிப்புகள் எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே, புதிதாக கொள்முதல் செய்யப்படும் நூல்களை மாற்று இடத்தில் வைத்து கிளை நூலகங்களுக்கு பிரித்து அனுப்ப வேண்டும். ஏற்கனவே, இடப்பற்றாக்குறை நிலவும் மாவட்ட நூலகத்தில் வாசர்களுக்கு இடையூறுகள் தொடர்ந்தால் வாசகர்கள் தலைமை நூலகத்தை புறக்கணிக்கும் நிலை உருவாகும் என வாசர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : bookstores ,Virudhunagar district ,
× RELATED போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ராஜபாளையம்