×

திருச்சுழி பூமிநாதர் கோயில் அருகே பயன்பாட்டுக்கு வராமலே பாழான பக்தர்கள் உடை மாற்றும் அறை

திருச்சுழி, ஜூன் 5: திருச்சுழியில் உள்ள குண்டாற்றுப் படுகையில், பூமிநாதர் கோயில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் குண்டாற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து,  பூமிநாதரை வணங்கிச் செல்கின்றனர். காசி, ராமேஸ்வரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு இணையாக புண்ணிய தலமாக, இந்த தலம் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி, தை அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 2011ல், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஆற்றுப்பகுதியில் ரூ.5 லட்சத்தில் குளியல் அறை, மகளிர் சுகாதார வளாகம் மற்றும் உடை மாற்றும் அறை எம்பி நிதி மூலம் கட்டப்பட்டது. ஆனால், இவைகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. குளியலறை, கழிப்பறை இல்லாததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். மேலும், அவர்களின் வருகையும் குறைந்து வருகிறது. எனவே, குண்டாற்றில் உள்ள மகளிர் சுகாதார வளாகம், குளியல் அறை மற்றும் உடை மாற்றும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 இது குறித்து புரோகிதர் ஒருவர் கூறுகையில், ‘20 ஆண்டுகளுக்கு முன், ஆடி தை அமாவாசைகளுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்சுழிக்கு வருகை புரிந்து தங்களது முன்னோர்களை வணங்கி, புனித நீராடி பூமிநாதரை வணங்கிச் செல்வர். அப்போது அருகில் உள்ள மண்டபத்தில் உடை மாற்றும் வசதி இருந்தது. தற்போது அந்த மண்டபம் சிதலமடைந்த நிலையில் இருப்பதால், பக்தர்கள் உடை மாற்ற இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். கடந்த 2011ல் எம்.பி. நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் செலவில் குளியலறை மற்றும் உடை மாற்றும் இடம் கட்டப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அவைகள் சிதிலமடைந்து வருகின்றன.  எனவே மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : devotees ,disguise devotees ,temple ,Tiruchuri Bhoominathar Temple ,
× RELATED தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்