×

ஆண்டிபட்டியில் நடந்த ஜமாபந்தியில் பட்டா மாறுதல்-முதியோர் உதவி தொகை விண்ணப்பங்கள் அதிகம்

ஆண்டிபட்டி, ஜூன் 5: ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்கள் பட்டா மாறுதல் மற்றும் முதியோர் உதவித்தொகை வேண்டியே அதிகமான மனுக்களை கொடுத்திருந்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வட்ட அளவிலான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்திற்கு பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபிரிதா தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். ஆண்டிபட்டி வட்டாட்சியர் பாலசண்முகம், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஆண்டிபட்டி உள்வட்டம் புலிமான்கோம்பை, திம்மரசநாயக்கனூர் பிட் 1, திம்மரசநாயக்கனூர் பிட் 2 ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் பட்டா மாறுதல், உட்பிரிவு, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, உடல் ஊனமுற்றோர் உதவித் தொகை, முதிர் கன்னியர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், கல்வி தொடர்பான சான்றிதழ் உள்ளிட்ட இனங்களில் மனுக்களை வழங்கினர். கோட்டாட்சியர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். உடன் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர். மேலும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உட்பட இதர துறையினர் கலந்து கொண்டனர்.

Tags : patta change ,Andipatti-Elders ,
× RELATED பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர்