×

கிராமத்தினர் பணம் செலுத்தியும் கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை மேலப்பூங்குடி மக்கள் வேதனை

சிவகங்கை, ஜூன் 5:  சிவகங்கை அருகே மேலப்பூங்குடி கண்மாயில் கிராமம் சார்பாக சீமைக்கருவேல மரங்களை அகற்ற பணம் செலுத்தியும் மாவட்ட நிர்வாகம் இதுவரை மரங்களை அகற்ற அனுமதி வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
மேலப்பூங்குடி கண்மாய் 60 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. இக்கண்மாயில் ஐந்து மடைகள் மூலம் மேலப்பூங்குடி, திருமண்பட்டி, வலையராதினிப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனப்பகுதியாக பயன்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் இக்கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற டெண்டர் விடப்பட்டது. அதில் வேறு ஆட்கள் எடுக்காமல் கிராமம் சார்பிலேயே பணம் செலுத்தி சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

இதன்படி கிராம பொதுமக்கள் சார்பாக கடந்த 31.03.2017ல் ரூ.ஒரு லட்சத்து 14ஆயிரம் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் செலுத்தப்பட்டது. இதில் ரூ.96 ஆயிரத்திற்கும் மட்டுமே ரசீது அளித்துள்ளனர். ஆனால் ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியும் இன்று வரை சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வில்லை. இதனால் சீமைக்கருவேல மரங்கள் மண்டி கண்மாயில் நீர் தேங்குவதும், நீர் வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரியாறு பாசனத்தின் கீழ் பயன்பெறும் பெறும் இக்கண்மாயின் நிலையால் கடந்த ஆண்டு இறுதியில் பெரியாறு நீர் இப்பகுதி கண்மாய்களுக்கு வழங்கியபோது இக்கண்மாய்க்கு வழங்க பொதுப்பணித் துறை நிர்வாகம் மறுத்து விட்டது.

சீமைக்கருவேல மரங்களால் தொடர் பாதிப்பு ஏற்படுவதால் உடனடியாக மரத்தை அகற்ற அனுமதி வழங்க வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: சீமைக்கருவேல மரங்களை அரசே அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கிராமம் சார்பில் பணம் செலுத்தி நாங்களே அகற்றுகிறோம் என தெரிவித்து ஓர் ஆண்டிற்கு மேல் ஆகியும் ஏன் அனுமதி வழங்கவில்லை என தெரியவில்லை. உடனடியாக சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனுமதிக்க வேண்டும். நீர் நிலைகளையும் நீர் மேலாண்மையும் பாதுகாக்க சிவகங்கை மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED அதிவேகமாக செல்லும் பஸ்கள்