×

குடிநீர் வசதிகூட இல்லை திண்டுக்கல் மலைக்கோட்டையில் மண்டைகாயும் சுற்றுலாபயணிகள் அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

திண்டுக்கல், ஜூன் 5: திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெயில் நேரத்தில் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். திண்டுக்கல் மலைக்கோட்டை பல வரலாற்று நினைவுகளை கொண்டுள்ளது. நீர் சுனைகள், விஜயநகர பேரரசின் சிற்ப கலையை உணர்த்தும் சிற்பங்கள், தூண்கள், கோயில், பாதாள சிறைகள் உள்ளன. இந்த கோட்டை தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படுகிறது. மலைக்கோட்டையை சுற்றி பார்ப்பதற்கு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. பெரியவர்களுக்கு ரூ.25ம், வெளிநாட்டினருக்கு ரூ.300ம் வசூலிக்கப்படுகிறது. கொடைக்கானல், பழநிக்கு வரும் சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி பார்க்க அதிகளவு வருகின்றனர்.

ஆனால் இங்கு அடிப்படை வசதியான கழிப்பறை, குடிநீர் என எதுவும் இல்லை. செங்குத்தான பாறையில் நடந்து செல்வதற்கு கடைப்பிடிகள், பிடிமானத்திற்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்படவில்லை.
இதனால் சுற்றுலா வரும் குழந்தைகள், முதியவர்கள் தவிக்கின்றனர். வெயில் நேரத்தில் குழந்தைகளுடன் வருபவர்களும், முதியவர்களும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். சுற்றுலாவை மேம்படுத்தும் முன்பு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், மலையேறும் சுற்றுலா பயணிகள் கம்பியை பிடித்து ஏற கைப்பிடிகள் அமைக்க திட்டமிட்டோம். புராதான சின்னமாக விளங்கும் பாறையில் ஓட்டை போட்டால், அதில் குழி ஏற்பட்டு விரிசல் ஏற்படும். வரலாற்று சின்னங்களில் குறைகள் ஏற்படும். இது பயணிகளை முகம் சுளிக்க செய்யும் என்பதால், அதை கைவிட்டுள்ளோம். குடிநீர், கழிப்பறையுடன் வண்ண விளக்குளால் மலைக்கோட்டை ஜொலிப்பதற்கு மின் விளக்குகளை அமைக்க உளளோம் என்றார்.

Tags : drinking water facilities ,Dindigul ,hill road ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்