×

மேலகரம் உரக்கிடங்கில் திடீர் தீ விபத்து

தென்காசி, ஜூன் 5: தென்காசி அடுத்த மேலகரம் பேரூராட்சி உரக்கிடங்கில், நேற்று மாலை திடீரென பிளாஸ்டிக் கழிவுகள் தீப்பற்றி எரிந்தது. ஜூவாலையாக கொழுந்துவிட்டு தீயால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் காணப்பட்டது.
தென்காசி அடுத்துள்ள மேலகரம் பேரூராட்சி பகுதியில், சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மேலகரம் சுடுகாடு அருகே உள்ள இடத்தில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் தனியாக பிரிக்கப்பட்டு சிறு சிறு துகள்களாக மாற்றி சேகரித்து வைக்கப்பட்டிருந்தது.
நேற்று மாலையில் இந்த குப்பை கிடங்கில் யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டனர். இதில் தீ ஜூவாலையாக கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் தெரிந்ததும் தென்காசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகத்தின் காரணமாக தீ மளமளவென பரவியது. தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக செங்கோட்டை தீயணைப்பு நிலைய வாகனமும் வரவழைக்கப்பட்டது. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தீ விபத்து சம்பவம் குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : fire accident ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...