×

மின்மோட்டார்கள் பழுதால் 6 நாளுக்கு ஒருமுறை விநியோகம் கோவில்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு

கோவில்பட்டி, ஜூன் 5:  கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 1.75 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டம் காலாவதியானதால், ரூ.82  கோடியில் 2வது பைப்லைன் திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி நிறைவுபெற்றதை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் புதிதாக அமைக்கப்பட்ட உறைகிணறுகள் வழியாக சேகரிக்கப்படும் தண்ணீர் இதற்காக உருவாக்கப்பட்ட தரைநிலை தொட்டிகளில் தேக்கிவைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் கயத்தாறு,  இளவேலங்கால் வழியாக கோவில்பட்டி பார்க்ரோட்டில் உள்ள குடிநீர்  நீரேற்று நிலையத்திற்கு ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு  வரப்படுகிறது. பின்னர் இந்த நீரேற்று நிலையத்தில் இருந்து நகரில்  உள்ள தாலுகா அலுவலகம், வீரவாஞ்சிநகர், ஊரணி தெரு, சுப்பிரமணியபுரம்,  வேலாயுதபுரம் உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் மின்மோட்டார்கள் மூலம் ஏற்றி அங்கிருந்து நகரில்  உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய்கள் வாயிலாக விநியோகம் செய்யப்படுகிறது.

2வது  பைப்லைன் திட்டம்  துவங்கியதை அடுத்து 2 நாட்களுக்கு முறை  குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது குடிநீர் ஏற்றும் மின்மோட்டார்களில் ஏற்பட்டுள்ள பழுதால் குடிநீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதனால் கடந்த சில  வாரமாக 6 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் குடிநீர்  விநியோகம் செய்யப்படுகிறது.   இதனால் தேவையான அளவு குடிநீர் கிடைக்கப்பெறாத நகர மக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து விசாரித்தபோது, கோவில்பட்டி நகரில் தாலுகா அலுவலகம், வீரவாஞ்சிநகர், ஊரணிதெரு,  சுப்பிரமணியபுரம், வேலாயுதபுரம் உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள மேல்நிலை  டேங்குகளில் தண்ணீரை ஏற்றுவதற்காக தலா 2 மின்மோட்டார்கள் என மொத்தம் 12  மோட்டார்கள் உள்ளன. ஆனால் இதில் 6 இடங்களில் உள்ள மோட்டார்களில் தலா 1  மோட்டார் என 6 மோட்டார்கள் பழுதாகி விட்டது. பழுதாகி நீண்ட நாட்களாகியும், இதுவரையில் இந்த மின்மோட்டார்கள சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் ஒவ்வொரு  மேல்நிலை டேங்குகளுக்கும் தலா ஒரு மோட்டரை வைத்து தண்ணீரை ஏற்றுவதால்  காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் நகர வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு 6  நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதேபோல்  கோவில்பட்டி அருகே இளவேலங்காலில் உள்ள   நீரேற்றும் நிலையத்திலும்  இயங்கி வரும் மோட்டார்களும் பழுதாகி உள்ளதால் கோவில்பட்டி நகருக்கு  வருவதற்கான குடிநீரின் அளவும் நாளுக்குநாள் குறைந்து வருவதாகமக்கள்  குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags :
× RELATED லாரியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் சாவு