×

ஆரணி அருகே விபத்து எஸ்ஐ கார் மோதி கார்பெண்டர் படுகாயம் கண்டுகொள்ளாததால் ெபாதுமக்கள் ஆத்திரம்

ஆரணி, ஜூன் 5: வேலூர் மாவட்டம், மூஞ்சூர்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காந்தி(40), கார்பெண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவரும் உறவினர் பெண்ணான சாந்தியும் அமாவாசை தினமான நேற்று முன்தினம் மேல்மலையனூர் கோயிலுக்கு பைக்கில் சென்றனர். அப்போது, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் அருகே உள்ள தனியார் மில் அருகே சென்றபோது எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காந்தி படுகாயம் அடைந்தார். சாந்தி லேசான காயம் ஏற்பட்டது.

பின்னர், விபத்து ஏற்படுத்திய கார் சிறிது தூரம் சென்று நின்றது. ஆனால் அதிலிருந்து யாரும் இறங்கி வரவில்லை. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் கார் அருகே ஆவேசமாக சென்று உள்ளே இருப்பவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய ஒருவர், தன்னை ஆரணி டவுன் எஸ்ஐ எனவும், அவசர வேலையாக செல்வதாகவும் கூறினார். இதற்கிடையில், தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ்சில் அப்பகுதி மக்கள் காந்தியை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், காந்தி மேல் சிகிச்சைகாக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி தாலுகா எஸ்ஐ பசலைராஜ் நடத்திய விசாரணையில் காரில் வந்தவர் வேலூர் மாவட்டம், மூஞ்சூர்பட்டை சேர்ந்த முனிகிருஷ்ணன்(50) என்பதும், இவர் ஆரணி டவுன் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக இருப்பது தெரிந்தது. மேலும், இவர் கடந்த சில தினங்களாக மருத்துவ விடுப்பில் இருப்பதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் முனிகிருஷ்ணன் தனது மகனுக்கு பெண் பார்த்துவிட்டு வந்தபோது விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து, எஸ்ஐ பசலைராஜ் முனிகிருஷ்ணனுக்கு போன் செய்து வாகனத்தை கொண்டு வரும்படி தெரிவித்தார். ஆனால், நேற்று வரை வாகனத்தை ஒப்படைக்கவில்லை.

Tags : accident ,carpenter ,SI ,Ariane ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்