×

வேலூர் சத்துவாச்சாரியில் அடுத்தடுத்து முன்னாள் எம்பி மகன், தொழிலதிபர் உள்பட 4 பேர் வீடுகளில் 40 சவரன் கொள்ளை மர்ம ஆசாமிகள் துணிகரம்

வேலூர், ஜூன் 5: வேலூர் சத்துவாச்சாரியில் ஒரே நாளில் அடுத்தடுத்து முன்னாள் எம்பி, தொழிலதிபர் உள்பட 4 பேர் வீடுகளில் புகுந்த மர்ம ஆசாமிகள் 40 சவரன் நகை, ₹20 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் சத்துவாச்சாரி 1வது பகுதி 12வது குறுக்கு தெருவில் முன்னாள் எம்பி மார்கபந்துவின் மகன்களான எழில், வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் வீடுகள் அடுத்தடுத்து உள்ளது. நேற்று முன்தினம் இரவு இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் இவர்களது வீட்டின் பின்பக்க ஜன்னல் கதவுகளை உடைத்த மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து, எழில் மற்றும் புகழேந்தி ஆகியோர் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பீரோவை உடைத்து, அதில் வைத்திருந்த துணிகளை வீசி விட்டு செல்போன், பணம், நகை உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய திருட்டு ஆசாமிகள் சத்துவாச்சாரி பேஸ்-2 2வது மெயின் ரோட்டில் லாட்ஜ் உரிமையாளர் ஜெகநாதன் என்பவரது வீட்டிற்குள் நுழைந்து, வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களின் அறையை பூட்டிவிட்டு, வீட்டில் இருந்த சுமார் ₹15 லட்சம் பணம் மற்றும் 30 சவரன் நகையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். திருட்டுபோன தொழிலதிபர் வீட்டில் அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் உள்ள டாக்டர் அப்பு என்பவர் வீட்டிலும் மர்ம ஆசாமிகள் நுழைந்து பணம், நகைகளை திருடி சென்றுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு நேற்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.
சத்துவாச்சாரியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவத்தில் சுமார் ₹20 லட்சம் பணம், 40 சவரன் நகைகள் திருட்டு போயிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் திருட்டு நடந்த வீடுகள் மற்றும் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு நடத்தினர். தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள வீடுகளில் மர்ம ஆசாமிகள் குறி வைத்து திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் சரக்கு அடித்த திருடன்

திருட்டு நடந்த வீடுகளில் மர்ம ஆசாமிகள் வீட்டில் இருந்தவர்களை அறையில் பூட்டிவிட்டு, நிதானமாக திருடி உள்ளனர். இதில் டாக்டர் அப்பு வீட்டில் நுழைந்த மர்ம ஆசாமிகள், வீட்டில் இருந்தவர்களை உள்ளே வைத்து பூட்டி விட்டு, வீட்டின் சமையல் அறையில் பிரியாணி மற்றும் மது குடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

போலீசார் ரோந்து இல்லை

வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று ஸ்ட்ராமிங் ஆபரேஷன் என்ற பெயரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சமீப காலங்களில் அமாவாசை ஸ்ட்ராமிங் ஆபரேஷன் நடவடிக்கையில் போலீசார் ரோந்து செல்லவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Tags : sisters ,Vellore Sathuacharya ,businessman ,MB ,
× RELATED திருவாரூர் அருகே இளைஞர் வீலிங்...