×

சோளிங்கர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

சோளிங்கர், ஜூன் 5: சோளிங்கர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள மேட்டுமங்கலம் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வழங்கவில்லையாம். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவேரிப்பாக்கம் பிடிஓ அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் சோளிங்கர்- காவேரிப்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாணாவரம் போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் வேலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ெபாதுமக்கள், ‘ஒரு மாதமாக புகார் தெரிவித்தும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக குடிநீர் வழங்கினால் தான் மறியலை கைவிடுவோம்'' என தெரிவித்தனர். அதற்கு ஊராட்சி செயலாளர் ‘நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதால் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலைநீர் தேக்க தொட்டியில் 30ஆயிரம் லிட்டர் மட்டுமே நிரம்புகிறது. எனவே அதிகாரிகளிடம் பேசி புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தார். இதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Sholingar ,
× RELATED சோளிங்கர் அருகே சிலிண்டர் வெடித்த...