ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 6.5 கிராம் தங்கத்தில் மசூதி வடிவமைப்பு ஆம்பூர் நகைத் தொழிலாளி சாதனை

ஆம்பூர், ஜூன் 5: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆம்பூரை சேர்ந்த நகைத் தொழிலாளி தேவன் 6.5 கிராம் தங்கத்தில் மசூதியை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். ஆம்பூர் ஷராப் பஜாரை சேர்ந்தவர் நகை தொழிலாளி தேவன்(50). இவர் குரிசிலாப்பட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது நடந்து வரும் முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி தங்கத்தால் அதற்கான பொருட்களை வடிவமைத்து வருகிறார். குறிப்பாக, உலகத் தமிழ் மாநாட்டின் போது திருக்குறள் புத்தகம், தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் உலக கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் போது அதற்கான உலகக் கோப்பைகளை தங்கத்தில் செய்து அசத்தினார்.

மேலும், இஸ்ரோ தனது ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி ஒரு குறிப்பிட்ட மைல்கல்லை எட்டிய நிலையில் இவர் அதற்கான மாதிரியை தங்கத்தில் வடிவமைத்தார். தற்போது, இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் தேவன் 6.5 கிராம் தங்கம், 35 கிராம் வெள்ளி ஆகியவற்றை பயன்படுத்தி 4 இன்ச் உயரமும், ஒரு சென்டி மீட்டர் அகலமும் கொண்ட மசூதி கோபுரமும், ஒரு சென்டி மீட்டர் அகலம் கொண்ட மசூதியின் மேற்கூரைகளும் கொண்ட மசூதியை உருவாக்கியுள்ளார். தேவனின் இந்த அருமையான படைப்பை ஆம்பூரைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் பார்த்து அவரை பாராட்டி செல்கின்றனர்.

Related Stories:

>