பிரபல ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு

உத்திரமேரூர், ஜூன் 5: உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தை சேர்ந்தவர் ருத்திரகுமார் (25). பிரபல ரவுடி. இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது நண்பர்கள் தோட்டநாவல் கிராமத்தை சேர்ந்த எழில், குண்ணவாக்கத்தை சேர்ந்த அப்பு. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை எழில், அப்பு, அவர்களது நண்பர் ஆகியோர் ருத்திரகுமார் வீட்டுக்கு சென்றனர்.அங்கு சிறிது நேரம் பேசிவிட்டு, அவரை மது அருந்த அழைத்து சென்றனர்.
குண்ணவாக்கம் அருகே உள்ள குளக்கரையில் அமர்ந்து, 4 பேரும் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து, ருத்திரகுமாரை சரமாரியாக தாக்கினர். அதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டினர். உடனே சுதாரித்து கொண்ட ருத்திரகுமார், அங்கிருந்து தப்பியோடி, குடியிருப்பு பகுதியில் நுழைந்து அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர்.
பொதுமக்களை கண்டதும், 3 பேரும், அங்கிருந்து பைக்கில் தப்பிவிட்டனர். உடனடியாக பொதுமக்கள், படுகாயமடைந்து மயக்க நிலையில் இருந்த ருத்திரகுமாரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.புகாரின்படி உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நண்பர்கள் 3 பேரை, வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags :
× RELATED ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன்...