ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரில் குப்பை தொட்டியில் வீசப்படும் இறைச்சி கழிவால் துர்நாற்றம்: நோய் பரவும் அபாயம்

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரில் உள்ள குப்பை தொட்டியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 177வது வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் சாஸ்திரி நகர் 4வது தெருவில் ஆரம்பசுகாதார நிலையம் உள்ளது. இதன் அருகே மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் குப்பையை கொட்டி வருகின்றனர்.இந்நிலையில், அந்த பகுதியில் இறைச்சி கடை வைத்துள்ள சிலர், இறைச்சி கழிவுகளை முறையாக அகற்றாமல், இந்த தொட்டியில் கொட்டி விடுகின்றனர். இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், இந்த இறைச்சி கழிவுகளை குப்பை லாரியில் ஏற்றும்போது தொட்டியில் தேங்கும் ரத்தம் வெளியேறி சாலையில் ஓடுகிறது.  இதனால், இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி தாய்மார்கள் மூக்கை மூடியபடி செல்லும் நிலை உள்ளது.  இந்த மருத்துவமனையை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே, இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Tags : Sodhi Disaster: Dust Attack ,
× RELATED ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரில் குப்பை...